பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
x

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது.

பிரெஞ்சு ஓபன்...

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி ஜூன் 5-ந் தேதி வரை நடக்கிறது.

களிமண் தரையில் நடைபெறும் போட்டியான பிரெஞ்சு ஓபனில் ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 2005-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் அறிமுகமான நடால் இதுவரை அந்த போட்டியில் 105 ஆட்டங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 3 ஆட்டங்களில் மட்டுமே தோல்வியை சந்தித்து இருக்கிறார். பிரெஞ்சு ஓபனை 13 முறை வென்று இருக்கும் நடால், கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச் (செர்பியா) ஆகியோரை (இருவரும் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளனர்) பின்னுக்கு தள்ளி மொத்தம் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். களிமண் தரை போட்டியில் மன்னன் என்று வர்ணிக்கப்படும் நடால் தனது வெற்றி பயணத்தை தொடரும் ஆர்வத்தில் உள்ளார். அவர் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டன் தாம்சனை சந்திக்கிறார்.

சாதனையை சமன் செய்வாரா?

நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாத காரணத்தால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பப்பட்டதால் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. அவர் சமீபத்தில் நடந்த இத்தாலி ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நல்ல உத்வேகத்துடன் உள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கும் நடாலின் சாதனையை சமன் செய்ய ஜோகோவிச் வரிந்து கட்டுவார் என்பதில் சந்தேகமில்லை. அவர் தனது முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகாவை எதிர்கொள்கிறார்.

உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் 19 வயது ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்காரஸ் இந்த ஆண்டில் களிமண் தரையில் நடந்த 3 போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார். சமீபத்தில் நடந்த மாட்ரிட் ஓபன் போட்டியில் ரபெல் நடால், ஜோகோவிச், ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோரை வீழ்த்தி வியக்க வைத்தார். இந்த முறை முன்னணி வீரர்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுவார் என்று எதிர்பார்க்கப்படும் அல்காரஸ் மற்றும் சிட்சிபாஸ் (கிரீஸ்), டேனில் மெட்விடேவ் (ரஷியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோரும் சாம்பியன் பட்ட ரேசில் முன்னிலை வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசு எவ்வளவு?

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), முன்னாள் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து), முன்னாள் சாம்பியன் சிமோனா ஹாலெப் (ருமேனியா), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகள் நவோமி ஒசாகா (ஜப்பான்), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) மற்றும் மரியா சக்காரி (கிரீஸ்), அமெரிக்க ஓபன் சாம்பியன் எம்மா ரடுகானு (இங்கிலாந்து), பாலா படோசா (ஸ்பெயின்) உள்ளிட்டோரில் ஒருவர் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.358 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.17¾ கோடி வழங்கப்படும். 2-வது இடம் பெறுபவர்களுக்கு ரூ.8¾ கோடி கிடைக்கும். இரட்டையர் பிரிவில் கோப்பையை வெல்பவர்களுக்கு ரூ.5½ கோடி பரிசாக கிட்டும்.

நேரடி ஒளிபரப்பு

இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story