ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்வியாடெக் வெற்றி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்வியாடெக் வெற்றி
x

image tweeted by @AustralianOpen

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் முதல் சுற்றில் நடால், ஸ்வியாடெக் வெற்றி பெற்றனர்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன்

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்), 40-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஜாக் டிராப்பரை எதிர்கொண்டார். இதில் வெகுவாக தடுமாறிய நடால் 3 மணி 41 நிமிடங்கள் போராடியே டிராப்பரை வீழ்த்த முடிந்தது. அவர் 7-5, 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய ஓபனில் 17-வது முறையாக 2-வது சுற்றில் நுழைந்தார்.

முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா) தன்னை எதிர்த்த மார்கோஸ் கிரோனை (அமெரிக்கா) 6-0, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் பந்தாடினார். 4-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் குவான்டின் ஹேஸ்சை (பிரான்ஸ்) வெளியேறினார். ஹர்காக்ஸ் (போலந்து), ஷபோவலோவ், அலியாசிம் (கனடா), ஜேனிக் சினெர் (இத்தாலி), பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா), கேமரூன் நோரி (இங்கிலாந்து) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். அதே சமயம் முன்னாள் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 7-6 (7-3), 3-6, 6-1, 6-7 (2-7), 4-6 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் மோல்கனிடம் (சுலோவேனியா) போராடி பணிந்தார். ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் நிக் கிரியாஸ் இன்று களம் இறங்க இருந்த நிலையில் கால் முட்டி காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியது உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

ஸ்வியாடெக்- பெகுலா

பெண்கள் ஒற்றையரில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 7-5 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் ஜூலே நீமியரை தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார். ஸ்வியாடெக் அடுத்து கொலம்பியாவின் கமிலா ஒசோரியோவை (கொலம்பியா) சந்திக்கிறார். 3-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் ஜாக்குலின் கிறிஸ்டியனை(ருமேனியா) விரட்டியடித்தார்.

முன்னாள் சாம்பியன்கள் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), சோபியா கெனின் (அமெரிக்கா) இடையிலான ஆட்டத்தில் அஸரென்கா 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்தடையை கடந்தார். மரியா சக்காரி (கிரீஸ்), கோகோ காப், மேடிசன் கீஸ், டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), எம்மா ரடுகானு (இங்கிலாந்து), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), விம்பிள்டன் சாம்பியன் எலினா ரைபகினா (கஜகஸ்தான்), ஆஸ்டாபென்கோ (லாத்வியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.


Next Story