சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: குரோஷிய வீரர் போர்னா கோரிச் 'சாம்பியன்'


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: குரோஷிய வீரர் போர்னா கோரிச் சாம்பியன்
x

உலக தரவரிசையில் 152-வது இடத்தில் இருந்த குரோஷியா வீரர் போர்னா கோரிச் 7-வது இடம் வகித்த சிட்சிபாஸ்சை (கிரீஸ்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார்.

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 152-வது இடத்தில் இருந்த குரோஷியா வீரர் போர்னா கோரிச் 7-6 (7-0), 6-2 என்ற நேர்செட்டில் 7-வது இடம் வகித்த சிட்சிபாஸ்சை (கிரீஸ்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார். 25 வயதான போர்னா கோரிச் 1,000 தரவரிசை புள்ளிகள் கொண்ட ஏ.டி.பி.மாஸ்டர்ஸ் பட்டத்தை கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் மிகவும் பின்தங்கிய தரவரிசையில் (152-வது இடம்) இருந்து ஏ.டி.பி.மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை போர்னா கோரிச் தனதாக்கினார். இதற்கு முன்பு 1,996-ம் ஆண்டு 143-வது தரவரிசையில் இருந்த ஸ்பெயின் வீரர் ராபர்டோ கேரட்டெரோ, ஹம்பர்க் ஓபன் போட்டியில் ஏ.டி.பி.மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றதே சாதனையாக இருந்தது. சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியதன் மூலம் போர்னா கோரிச் தரவரிசையில் 123 இடங்கள் எகிறி 29-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 35-வது இடம் வகித்த பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 2 முறை விம்பிள்டன் சாம்பியனான பெட்ரா கிவிடோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த போட்டியில் தகுதி சுற்றில் விளையாடி பிரதான சுற்றுக்குள் அடியெடுத்து வைத்த கரோலின் கார்சியா 1,000 தரவரிசை புள்ளிகள் கொண்ட டபிள்யூ.டி.ஏ. பட்டத்தை வென்ற முதல் தகுதி சுற்று வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

1 More update

Next Story