பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் அமெரிக்க வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் அமெரிக்க வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்
x

கோப்புப்படம்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் வருகிற 28-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது.

பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற களிமண்தரை போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் வருகிற 28-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரும், பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருப்பவருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) முதல் சுற்றில் தகுதிநிலை வீரரை சந்திக்கிறார்.

22 கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றிய சாதனையாளர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) தனது சவாலை அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவாசெவிச்சுடன் தொடங்குகிறார். தடைகளை கடந்து தொடர்ந்து முன்னேற்றம் கண்டால் அரைஇறுதியில் ஜோகோவிச் - அல்காரஸ் நேருக்கு நேர் சந்திக்க வேண்டி வரும். 2-ம் நிலை வீரர் ரஷியாவின் மெட்விடேவ் முதல் ரவுண்டில் தகுதிநிலை வீரருடன் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது.

பிரெஞ்சு ஓபனை 14 முறை வென்று கொடிகட்டி பறந்த ஸ்பெயினின் ரபெல் நடால் இந்த தடவை காயத்தால் விலகியது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் 'நம்பர் ஒன்' வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) முதல் சுற்றில் கிறிஸ்டினா புக்சாவை (ஸ்பெயின்) எதிர்கொள்கிறார். இந்த முறை ஸ்வியாடெக்குக்கு அட்டவணை கடும் சவாலாக தெரிகிறது. அவர் 4-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் கிரெஜ்சிகோவாவுடனும் (செக்குடியரசு), அரைஇறுதியில் விம்பிள்டன் சாம்பியன் எலினா ரைபகினாவுடனும் (கஜகஸ்தான்) மோதும் நிலைமை ஏற்படலாம். ஸ்வியாடெக்கிடம் இருந்து 'நம்பர் ஒன்' இடத்தை தட்டிப்பறிக்க நெருங்கி வரும் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், 2-ம் நிலை வீராங்கனையுமான அரினா சபலென்கா( பெலாரஸ்) முதல் சுற்றில் மார்ட்டா கோட்யுக்கை (உக்ரைன்) சந்திக்கிறார்.


Next Story