பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி
x

Novak Djokovic (image courtesy: ATP tour twitter via ANI)

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 2-வது நாளான நேற்றும் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2, 7-6 (7-1) என்ற நேர்செட்டில் 114-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் கோவாசெவிச்சை (அமெரிக்கா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி 7-5, 4-6, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் பெனோய்ட் பேரை (பிரான்ஸ்) போராடி வீழ்த்தினார். விறுவிறுப்பான இந்த ஆட்டம் 3 மணி 33 நிமிடம் நீடித்தது. இதேபோல் 3 மணி 47 நிமிடம் நீடித்த இன்னொரு ஆட்டத்தில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ் 6-4, 7-5, 4-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரன்டன் நகாஷிமாவை சாய்த்தார். 4 மணி 35 நிமிடம் தொடர்ந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 7-6 (7-5), 6-4, 6-7 (2-7), 1-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆல்பர்ட் ரமோஸ் வினோலஸ்சை (ஸ்பெயின்) வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் பாபி போக்னினி (இத்தாலி), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்), அஸ்லான் கரட்சேவ் (ரஷியா) உள்ளிட்டோர் வெற்றியை ருசித்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-0, 6-4 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எளிதில் தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார். இதே போல் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-1, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் கனேபியை (எஸ்தோனியா) விரட்டியடித்தார். இன்னொரு ஆட்டத்தில் ரஷியாவின் எலினா அவானேஸ்யன் 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச்சுக்கு (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி அளித்தார்.

எலினா ஸ்விடாலினோ (உக்ரைன்), புதின்சேவா (கஜகஸ்தான்), வான்ட்ரோசோவா (செக்குடியரசு) ஆகியோர் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.


Next Story