பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; வீனஸ் வில்லியம்சின் சாதனையை சமன் செய்த இகா ஸ்வியாடெக்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; வீனஸ் வில்லியம்சின் சாதனையை சமன் செய்த இகா ஸ்வியாடெக்
x
தினத்தந்தி 4 Jun 2022 3:39 PM GMT (Updated: 4 Jun 2022 4:11 PM GMT)

பிரெஞ்சு ஓபன் டென்னிசில் பெற்ற வெற்றியால் 35 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்த பெருமையை இகா ஸ்வியாடெக் பெற்றுள்ளார்.



பாரீஸ்,



கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரீசில் நடந்து வருகின்றன. இதில், மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் மற்றும் அமெரிக்காவின் 18 வயது கொண்ட கோகோ காப் ஆகியோர் விளையாடினர்.

இதில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் முதல் செட்டை 6-1 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். இதனால், அடுத்த செட்டில் வெற்றி பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு அமெரிக்க வீராங்கனை கோகோ தள்ளப்பட்டார்.

ஆனால், அந்த செட்டையும் ஸ்வியாடெக் எளிதில் கைப்பற்றினார். இதனால், 6-1, 6-3 என்ற புள்ளி கணக்கில் இறுதி போட்டியில் ஸ்வியாடெக் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வென்றுள்ளார்.

இந்த போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 8 நிமிடங்களில் நடந்து முடிந்தது. இதனால், 35 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்த பெருமையை இகா ஸ்வியாடெக் பெற்றுள்ளார். அவர், 35 தொடர் வெற்றிகளை பெற்ற வீனஸ் வில்லியம்சின் சாதனையை சமன் செய்துள்ளார்.


Next Story