சென்னை ஓபன் டென்னிசில் இந்திய வீரர் சுமித் நாகல் 'சாம்பியன்'


சென்னை ஓபன் டென்னிசில் இந்திய வீரர் சுமித் நாகல் சாம்பியன்
x

இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் சுமித் நாகல் முதல் முறையாக டாப்-100 இடத்திற்குள் நுழைகிறார்.

சென்னை,

சென்னை ஓபன் சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்தது. நேற்று அரங்கேறிய ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 121-வது இடத்தில் உள்ள சுமித் நாகல் (இந்தியா), 114-ம் நிலை வீரரான லுகா நார்டியை (இத்தாலி) எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுமித் நாகல் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் நார்டியை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கினார். ஆட்டம் 1 மணி 40 நிமிடங்கள் நடந்தது. அவருக்கு ரூ.15 லட்சம் பரிசுடன் 100 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. இந்த தொடரில் ஒரு செட்டை கூட இழக்காமல் அசத்திய சுமித் நாகலுக்கு இது 5-வது சேலஞ்சர் கோப்பையாகும்.

இந்த வெற்றியின் மூலம் இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் சுமித் நாகல் முதல் முறையாக டாப்-100 இடத்திற்குள் நுழைகிறார். அவர் 98-வது இடத்தை பிடிக்கிறார். 2019-ம் ஆண்டு பிரஜ்னேஷ் குணேசுவரனுக்கு பிறகு டாப்-100க்குள் வரும் முதல் இந்திய வீரர் நாகல் ஆவார்.

அடுத்ததாக பெங்களூரு ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. சென்னை ஓபனில் ஆடிய சுமித் நாகல், லுகா நார்டி, ராம்குமார், சகெத் மைனெனி, பிரஜ்வால் தேவ் உள்ளிட்டோர் இந்த போட்டியிலும் களம் காணுகிறார்கள்.


Next Story