இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அல்காரஸ் 3-வது சுற்றுக்கு தகுதி


இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அல்காரஸ் 3-வது சுற்றுக்கு தகுதி
x

கோப்புப்படம் 

ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் 132-வது ஆட்டத்தில் ஆடிய அல்காரஸ் ருசித்த 100-வது வெற்றி இதுவாகும்.

இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் 132-வது ஆட்டத்தில் ஆடிய அல்காரஸ் ருசித்த 100-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அவர் செஞ்சுரி வெற்றியை குறைந்த போட்டியில் எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அமெரிக்க ஜாம்பவான் ஜான் மெக்கன்ரோ 131 ஆட்டங்களில் 100-வது வெற்றியை அடைந்து முதலிடத்தில் உள்ளார். மற்ற ஆட்டங்களில் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), பெலிக்ஸ் அஜெர் அலியாசிம் (கனடா), டாமி பால் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 7-6 (7-1) என்ற நேர்செட்டில் கனடாவின் பியான்கா ஆன்ட்ரீஸ்குவை விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 7 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் வர்வரா கிராசெவா 6-4, 6-4 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை டாரியா கசட்கினாவை வெளியேற்றினார்.


Next Story