மியாமி ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ரைபகினா கால்இறுதிக்கு முன்னேற்றம்


மியாமி ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ரைபகினா கால்இறுதிக்கு முன்னேற்றம்
x

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர்.

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் 13-ம் நிலை வீராங்கனையான பார்போரா கிரெஜ்சிகோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து கால்இறுதிக்குள் கால்பதித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் பெல்ஜியத்தின் எலிசி மெர்டென்சை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார். சர்வதேச போட்டியில் ரைபகினா தொடர்ந்து பெற்ற 11-வது வெற்றி இதுவாகும். ரஷிய வீராங்கனை எகதெரினா அலெக்சாண்ட்ரோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) 6-7 (0-7), 2-0 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் அலெக்சாண்ட்ரோவா வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார்.

ஜெசிகா பெகுலா வெற்றி

இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-1, 7-5 என்ற நேர்செட்டில் போலந்தின் மாக்டா லினெட்டை விரட்டியடித்து தொடர்ந்து 2-வது முறையாக கால்இறுதியை எட்டினார். மற்ற ஆட்டங்களில் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), சோரனா கிறிஸ்டி (ருமேனியா), அனஸ்டாசியா படபோவா (ரஷியா), மார்டினா டிரிவிசன் (இத்தாலி) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் முன்னேற்றம் கண்ட கிறிஸ்டியன் காரினை (சிலி) வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார். சிட்சிபாஸ் அடுத்து கரன் கச்சனோவை (ரஷியா) எதிர்கொள்கிறார். முந்தைய சுற்றில் கச்சனோவ் 6-2, 6-4 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் ஜிரி லெஹெச்சிகாவை வென்று இருந்தார்.

பிரான்சிஸ்கோ செருன்டோலோ (அர்ஜென்டினா), அட்ரியன் மன்னரினோ (பிரான்ஸ்), சோனிகோ (இத்தாலி) ஆகியோரும் தங்களது 3-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.


Next Story