தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்


தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
x

தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

சென்னை,

தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி (17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர்) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 30 மாநிலங்கள், நிறுவனங்களை சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அணிகள் பிரிவு, தனிநபர், இரட்டையர் பிரிவுகளில் போட்டி நடக்கிறது.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.6.6 லட்சமாகும். 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு தலா ரூ.72 ஆயிரமும், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கோப்பையை வெல்பவர்களுக்கு தலா ரூ.60 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி நடப்பது 15 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2007-ம் ஆண்டில் சப்- ஜூனியர் போட்டி நடந்தது. இந்த தகவலை தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவர் தேவநாதன், செயலாளர் வித்யாசாகர் ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story