டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் நோவக் ஜோகோவிச் மீண்டும் முதலிடம்


டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் நோவக் ஜோகோவிச் மீண்டும் முதலிடம்
x

கோப்புப்படம் AFP

டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் மீண்டும் முதலிடம் பிடித்தார்.

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா), 9-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்கொண்டார். 1 மணி 34 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 7-5, 6-3 என்ற நேர்செட்டில் சின்னரை தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மெட்விடேவ் 1,000 தரவரிசை புள்ளிகள் கொண்ட ஏ.டிபி.மாஸ்டர்ஸ் பட்டத்தை வெல்வது இது 5-வது முறையாகும். ஒட்டுமொத்தத்தில் அவர் வசப்படுத்திய 19-வது பட்டம் இதுவாகும். வாகை சூடிய மெட்விடேவுக்கு ரூ.10 கோடியும், 2-வது இடத்தை பெற்ற ஜானிக் சின்னருக்கு ரூ.5½ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

சாம்பியன் பட்டம் வென்ற பிறகு மெட்விடேவ் கூறுகையில், '1½ ஆண்டுகளுக்கு பிறகு 1,000 தரவரிசை புள்ளி கொண்ட மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆட்டம் உண்மையிலேயே கடினமானதாக இருந்தது. சின்னருக்கு லேசான காயம் அல்லது தசைப்பிடிப்பு ஏற்பட்டதா? என்பது எனக்கு தெரியாது. நானும் சற்று தடுமாறத்தான் செய்தேன். ஆனால் அதனை வெளிக்காட்டாமல் இருக்க முயற்சித்தேன்' என்றார்.

இதற்கிடையே, வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (7,160 புள்ளி) மீண்டும் முதலிடத்தை பிடித்தார். மியாமி ஓபனின் அரைஇறுதியில் தோல்வி கண்டதன் மூலம் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் (6,780 புள்ளி) முதலிடத்தை இழந்தார். அவர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.

மியாமி ஓபன் பட்டத்தை வென்ற மெட்விடேவ் ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார். இறுதிசுற்றில் தோல்வி கண்ட இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 2 இடம் அதிகரித்து 9-வது இடத்தையும், அரைஇறுதியில் தோற்ற ரஷிய வீரர் கரன் கச்சனோவ் 5 இடம் எகிறி 11-வது இடத்தையும் பிடித்து இருக்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 'டாப்-5' வரிசையில் எந்தவித மாற்றமில்லை. போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதலிடத்தில் தொடருகிறார். மியாமி ஓபன் பட்டத்தை சொந்தமாக்கிய செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவா 2 இடம் உயர்ந்து 10-வது இடத்தை எட்டியுள்ளார்.


Next Story