அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

அல்காரஸ் அசத்தல்

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், 26-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை சந்தித்தார்.

இந்த ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக நகர்ந்தது. இருவரும் நீயா, நானா? என்று மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. 4 மணி 19 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 19 வயதான கார்லஸ் அல்காரஸ் 6-7 (6-8), 6-3, 6-1, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் 24 வயது பிரான்சிஸ் டியாபோவை வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் பீட் சாம்பிராசுக்கு (அமெரிக்கா) பிறகு அமெரிக்க ஓபன் போட்டியில் இறுதி சுற்றுக்குள் நுழைந்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். அல்காரஸ் தனது கடைசி 3 ஆட்டங்களிலும் 5 செட் வரை போராடி வெற்றியை ருசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்கு பிறகு அல்காரஸ் அளித்த பேட்டியில், 'பெரிய விஷயங்களுக்காக போராடுவது அற்புதமானது. நான் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறேன். உலகின் நம்பர் ஒன் இடத்தை அடைய முடியும் என்று நினைக்கிறேன். அதேநேரத்தில் அது அதிக தொலைவில் உள்ளது. நம்ப முடியாத ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் வீரருடன் இறுதிப்போட்டியில் மோதுகிறேன். அவர் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர். இறுதிப்போட்டியில் எனது முழு திறனையும் வெளிப்படுத்த முயற்சிப்பேன். இறுதிப்போட்டியில் ஆடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்று தெரிவித்தார்.

கேஸ்பர் ரூட் வெற்றி

மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள நார்வே வீரர் கேஸ்பர் ரூட், 31-வது இடத்தில் இருக்கும் ரஷியாவின் கரென் கச்சனோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கேஸ்பர் ரூட் 7-6 (7-5), 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் கரென் கச்சனோவை விரட்டியடித்து முதல் முறையாக அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறார். கேஸ்பர் ரூட் கடந்த ஜூன் மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபனிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

இன்று இரவு நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ்-கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இதில் வெற்றி பெறுபவருக்கு இரட்டை மகிழ்ச்சி காத்து இருக்கிறது. அதாவது வாகை சூடுபவர் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முத்தமிட்டுவதுடன், உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற அரிய அந்தஸ்தையும் அடைவார். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றனர். அந்த 2 ஆட்டங்களிலும் அல்காரஸ் வெற்றி கண்டுள்ளார்.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென் 2,3,4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இரட்டையர் சாம்பியன்

ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் ஜோடியான ராஜீவ் ராம் (அமெரிக்கா)-ஜோ சாலிஸ்பரி (இங்கிலாந்து) 7-6 (7-4), 7-5 என்ற நேர்செட்டில் வெஸ்லி கோல்ஹோப் (நெதர்லாந்து)-நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து) இணையை தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


Next Story