அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்..!!


அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்..!!
x

image courtesy; AFP

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபெற்றுள்ளனர். இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனும் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரருமான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ஸ்பெயின் வீரரான பெர்னாப் ஜபடா மிரல்லெஸ் உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் எளிதில் வெற்றி பெற்றார். 1 மணி நேரம் 59 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் ஜோகோவிச் 6-4, 6-1 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் 3-வது சுற்று போட்டியில் சக நாட்டவரான லாஸ்லோ டிஜெரே உடன் விளையாட உள்ளார்.

இதில் நடந்த பெண்கள் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டென்னிஸ் தரவரிசையில் 2-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானை சேர்ந்த ரைபகினா ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோம்லஜனோவிக் உடன் விளையாட இருந்தார். இதில் காயத்தால் அஜ்லா டோம்லஜனோவிக் விலகிய நிலையில் ரைபகினா 3-வது சுற்றுக்குள் முன்னேறியுள்ளார்.


Next Story