அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்; ஜோகோவிச், அல்காரஸ் தயார்..!!


அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்; ஜோகோவிச், அல்காரஸ் தயார்..!!
x

image courtesy ; AFP

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்து முதல் சுற்று போட்டிகள் நாளை (திங்கள்கிழமை) ஆரம்பமாக உள்ளன.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் தகுதி சுற்று போட்டிகள் கடந்த 22ஆம் தேதி தொடங்கி இன்றுடன் (ஞாயிற்றுகிழமை) முடிவடைந்தன. முதல் சுற்று ஆட்டங்கள் நாளை நடைபெற உள்ளன. இந்த தொடர் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி உடன் முடிவடைய உள்ளது. பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நடப்பு சாம்பியனாக டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ் உள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனாக டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீராங்கனையான போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் உள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனோ விதிமுறை காரணமாக அமெரிக்க ஓபனில் பங்கேற்காத அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செர்பிய வீரர் ஜோகோவிச் இந்த முறை பங்கேற்க உள்ளார். இதனால் இந்த தொடரின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. அல்காரஸ் மற்றும் ஜோகோவிச் இடையே நம்பர் 1 இடத்திற்கு போட்டி நிலவி வருகிறது. தற்போது ஜோகோவிச் தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ளார்.

மேலும் சமீப காலமாக இருவரும் டென்னிஸ் தொடர்களின் இறுதி போட்டியில் யார் சாம்பியன் என மல்லுக்கட்டி வருகின்றனர். நடந்து முடிந்த விம்பிள்டன் தொடரின் இறுதி போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அதற்கு பழியாக தற்போது நடந்த சின்சினாட்டி ஓபன் தொடரின் இறுதி போட்டியில் அல்காரசை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் ஆனார். இதனால் இந்த தொடரில் இருவர் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

ஜோகோவிச் தனது முதல் சுற்று போட்டியில் பிரான்ஸ் வீரரான அலெக்சாண்டர் முல்லர் உடன் மோத உள்ளார். அல்காரஸ் ஜெர்மன் வீரரான டொமினிக் கோபர் உடன் விளையாட உள்ளார்.


Next Story