விம்பிள்டன் டென்னிஸ்: அல்காரஸ், சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்


விம்பிள்டன் டென்னிஸ்: அல்காரஸ், சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

Aryna Sabalenka (image courtesy: Madrid open twitter via ANI)

விம்பிள்டன் டென்னிசில் அல்காரஸ், சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), பிரான்சின் அலெக்சாண்டர் முல்லெரை சந்தித்தார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-4, 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து 2-வது முறையாக 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-4, 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் யோசுக் வதானுகியை (ஜப்பான்) தோற்கடித்தார். இதே போல் 6-ம் நிலை வீரர் ஹோல்ஜர் ருனே (டென்மார்க்) 6-3, 7-6 (7-3), 6-4 என்ற நேர் செட்டில் கார்பல்லெஸ் பானாவை (ஸ்பெயின்) விரட்டினார். டேனில் மெட்விடேவ் (ரஷியா). பெரேட்டினி (இத்தாலி), ஹர்காக்ஸ் (போலந்து), டேவிடோவிச் போகினா (ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான அரினா சபலென்கா (பெலாரஸ்), கிராசெவாவை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். முதல் செட்டை இழந்த சபலென்கா அதன் பிறகு சுதாரித்து சரிவில் இருந்து மீண்டார். 1 மணி 58 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சபலென்கா 2-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் கிராசெவாவை வெளியேற்றி 3-வது சுற்றை எட்டினார்.

முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) தன்னை எதிர்த்த கலினினாவை (உக்ரைன்) 6-2, 4-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார். இந்த வெற்றியை வசப்படுத்த பியான்காவுக்கு 2 மணி 48 நிமிடங்கள் தேவைப்பட்டது. இரண்டு முறை விம்பிள்டனை வென்றவரான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் சஸ்னோவிச்சை (பெலாரஸ்) பந்தாடினார்.

முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரம் விக்டோரியா அஸரெனகா (பெலாரஸ்) 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 10-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவுக்கு (ரஷியா) அதிர்ச்சி அளித்து விம்பிள்டனில் 6 ஆண்டுக்கு பிறகு 4-வது சுற்றை எட்டினார். மேடிசன் கீஸ் (அமெரிக்கா), மார்தா கோஸ்ட்யுக் (உக்ரைன்), டால்மா கால்பி (ஹங்கேரி) உள்ளிட்டோரும் தங்களது 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.


Next Story