விம்பிள்டன் டென்னிஸ்: அல்காரஸ், ரைபகினா வெற்றி


விம்பிள்டன் டென்னிஸ்: அல்காரஸ், ரைபகினா வெற்றி
x

விம்பிள்டன் டென்னிசின் முதல் சுற்றில் அல்காரஸ், ரைபகினா ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் போன்றே 2-வது நாளான நேற்றைய தினமும் பெரும்பாலான ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன.

இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), பிரான்சின் ஜெரிமி சார்டியை சந்தித்தார். மழையால் மேற்கூரை மூடப்பட்ட நிலையில் தொடர்ந்த இந்த ஆட்டத்தில் அல்காரஸ் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடி எதிராளியை திணறடித்தார். ஒரு மணி 53 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் அல்காரஸ் 6-0, 6-2, 7-5 என்ற நேர் செட்டில் சார்டியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்துடன் 36 வயதான சார்டி சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற்றார். 8-ம் நிலை வீரர் ஜானிக் சின்னெர் (இத்தாலி) தன்னை எதிர்த்த அர்ஜென்டினாவின் செருன்டோலோவை 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் விரட்டினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும், நடப்பு சாம்பியனுமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), 49-ம் நிலை வீராங்கனை ஷெல்பி ரோஜர்சுடன் (அமெரிக்கா) மோதினார். இதில் முதல் செட்டை பறிகொடுத்த ரைபகினா அதன் பிறகு சுதாரித்து மீண்டெழுந்து அடுத்த இரு செட்டுகளையும் வசப்படுத்தினார்.1 மணி 43 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் ரைபகினா 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ரோஜர்சை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் மேக்டாலினா பிரெச்சை (போலந்து) ஓடவிட்டார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 3-6 என்ற நேர் செட்டில் எலினா ஸ்விடோலினாவிடம் (உக்ரைன்) பணிந்தார்.

விம்பிள்டனில் 24-வது முறையாக பங்கேற்ற 43 வயதான வீனசின் சவால் முதல் சுற்றோடு முடிந்து போனது. இதே போல் சோபியா கெனின் (அமெரிக்கா) 6-4, 4-6, 6-2 செட் கணக்கில் சக நாட்டவரும், 7-ம் நிலை வீராங்கனையுமான கோகோகாப்புக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.


Next Story