விம்பிள்டன் டென்னிஸ்: ரஷிய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்?


விம்பிள்டன் டென்னிஸ்: ரஷிய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்?
x

இங்கிலாந்து டென்னிஸ் சங்கம் மற்றும் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பழம் பெருமை வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இந்த போட்டியை நடத்தும் ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் அதிரடியாக தடை விதித்தது.

இதேபோல் இங்கிலாந்து டென்னிஸ் சங்கத்தால் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலும் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இருப்பதாலும், அதற்கு பெலாரஸ் நாடு ஆதரவு அளிப்பதாலும் அந்த நாட்டு வீரர்களுக்கு எதிராக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இங்கிலாந்து டென்னிஸ் சங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த திடீர் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த சர்வதேச டென்னிஸ் சங்கம், இங்கிலாந்து டென்னிஸ் சங்கம் மற்றும் ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப்புக்கு அபராதம் விதித்ததுடன், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தரவரிசை புள்ளிகள் வழங்கப்படாது என்று தடாலடியாக அறிவித்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற ஜூலை 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் ரஷியா, பெலாரஸ் வீரர்கள் மீதான தடை விவகாரத்தில் இங்கிலாந்து டென்னிஸ் சங்கம் மற்றும் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பெருமைப்படுத்தும் வகையிலோ அல்லது போரை நியாயப்படுத்தும் விதமாகவோ போட்டியின் போது எந்த செயலிலும் ஈடுபடமாட்டோம் என்று ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர், வீராங்கனைகளிடம் உறுதிமொழியை எழுத்துபூர்வமாக பெற்றுகொண்டு விளையாட அனுமதி அளிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


Next Story