தொடரை வெல்லப்போவது யார்..? இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்..!


தொடரை வெல்லப்போவது யார்..? இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்..!
x
தினத்தந்தி 11 Jan 2022 5:52 AM IST (Updated: 11 Jan 2022 5:52 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது.

கேப்டவுன், 

இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்திலும், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி கண்டது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் தொடரை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

இந்திய அணி முதலாவது டெஸ்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்கியது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அணிக்கு வலுவூட்டினார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால் 2-வது டெஸ்டில் இந்திய அணியின் பேட்டிங் எதிர்பார்த்தபடி அமையவில்லை. முதல் இன்னிசிங்சில் முன்னிலை பெற்ற தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் இந்திய பந்து வீச்சை அருமையாக சமாளித்து பதிலடி கொடுத்ததுடன், ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய அணியை முதல்முறையாக தோல்வியை தழுவ வைத்தது.

முதுகு வலி பிரச்சினை காரணமாக கடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாத கேப்டன் விராட்கோலி முழு உடல் தகுதியை எட்டி விட்டாததால் இந்த போட்டியில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த போட்டியில் அவருக்கு பதிலாக களம் இறங்கிய ஹனுமா விஹாரிக்கு இடம் கிடைக்காது. கடந்த 2 ஆண்டுக்கு மேலாக சர்வதேச போட்டியில் சதம் அடிக்காமல் ஏமாற்றம் அளித்து வரும் விராட்கோலிக்கு இது 99-வது டெஸ்ட் போட்டியாகும். அவர் நீண்ட கால சதம் ஏக்கத்தை தீர்ப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த போட்டியில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இன்னும் தேராததால் இந்த போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்களில் இஷாந்த் ஷர்மா அல்லது உமேஷ் யாதவ் இடம் பிடிப்பார். மற்றபடி அணியில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. புஜாரா, ரஹானே ஆகியோர் கடைசி இன்னிங்சில் அரைசதம் அடித்ததன் மூலம் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளனர். வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான கேப்டவுன் மைதானத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மட்டுமின்றி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமானதாகும். மேலும் ஜஸ்பிரித் பும்ரா தனது பந்து வீச்சில் மேலும் ஜொலிக்க வேண்டியது தேவையான ஒன்றாகும்.

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் கேப்டன் டீன் எல்கர் (202 ரன்கள்) தெம்பா பவுமா (161 ரன்), கீகன் பீட்டர்சன் (122 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் காஜிசோ ரபடா, லுங்கி இங்கிடி, மார்கோ ஜான்சென் ஆகியோர் மிரட்டி வருகிறார்கள். கடந்த டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியால் தென்ஆப்பிரிக்க அணி கூடுதல் நம்பிக்கையுடன் இந்த போட்டியில் களம் இறங்கும்.

தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. கடந்த 7 தொடர்களில் இந்திய அணி 6 முறை தோல்வியை சந்தித்தது. ஒரு முறை தொடரை டிரா செய்தது. அத்துடன் கேப்டவுன் மைதானத்தில் இதுவரை 5 டெஸ்ட் போட்டியில் களம் கண்டு இருக்கும் இந்திய அணி ஒன்றில் கூட வெற்றியை சுவைத்தது கிடையாது. இங்கு 3-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டு இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் 8-வது முறையாக டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி முந்தைய மோசமான நிலையை மாற்றி தொடரை வென்று சரித்திரம் படைக்கும் ஆவலுடன் உள்ளது. அதேநேரத்தில் உள்ளூரில் தொடரை இழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்க அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். இதனால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் மட்டும் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா: லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட்கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட், ஆர்.அஸ்வின், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா அல்லது உமேஷ் யாதவ்.

தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்) , மார்க்ராம், கீகன் பீட்டர்சன், வான்டெர் துஸ்சென், தெம்பா பவுமா, கைல் வெரைன், மார்கோ ஜான்சென், காஜிசோ ரபடா, கேஷவ் மகராஜ், டுவைன் ஒலிவியர், லுங்கி இங்கிடி.

இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story