இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது.
1,000-வது ஒரு நாள் கிரிக்கெட்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இது இந்தியாவின் 1,000-வது ஒரு நாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மைல்கல்லை எட்டும் முதல் அணி இந்தியா தான். ஆனால் வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒரு நாள் தொடர் ரசிகர்கள் இன்றியே நடக்க உள்ளது.
புதிய கூட்டணி
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய நிலையில், இந்திய அணி புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. இந்த தொடரில் இருந்து ரோகித் சர்மா- பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட்டணியின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்திய முகாமுக்குள் ெகாரோனா ஊடுருவி அச்சுறுத்துகிறது. ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய முன்னணி வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட மாற்று தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 3 நாள் தனிமைப்படுத்துதலை இன்னும் நிறைவு செய்யாததால் அவரால் முதலாவது ஆட்டத்தில் விளையாட முடியாது. தனிப்பட்ட காரணங்களுக்காக லோகேஷ் ராகுல் ஏற்கனவே முதல் ஆட்டத்திற்கான அணியில் இடம் பெறவில்லை.
தொடக்க வீரர் இஷான் கிஷன்
இதனால் கேப்டன் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் காணும் அதிர்ஷ்டம் இஷான் கிஷனுக்கு கிட்டியுள்ளது. மற்றொரு தொடக்க வீரர் வாய்ப்புக்கு அணியில் இஷான் கிஷன் மட்டுமே உள்ளார். இதனால் அவர் என்னுடன் இணைந்து தொடக்க வீரராக ஆடுவார் என்று கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்பு யுஸ்வேந்திர சாஹல்- குல்தீப் யாதவ் இணைந்து சுழல் தாக்குதலில் பல ஆட்டங்களில் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தனர். இவர்கள் இப்போது மீண்டும் ஒரு சேர அணியில் இடம் பிடித்துள்ளனர். அவர்களை மறுபடியும் ஒன்றாக களம் இறக்குவது குறித்து தனது மனதில் இருப்பதாகவும், ஆனால் குல்தீப் காயத்தில் இருந்து இப்போதுதான் மீண்டு வந்திருப்பதால் அவரை உடனடியாக விளையாட வைப்பதில் அவசரம் காட்டமாட்டோம் என்றும் ரோகித் குறிப்பிட்டார். இதனால் இன்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவுக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் சந்தேகம் தான்.
விராட் கோலி
முன்னாள் கேப்டன் விராட் கோலி நல்ல பார்மில் இருந்தாலும் 2 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்க முடியாமல் போராடுகிறார். உள்ளூர் தொடரிலாவது அந்த ஏக்கத்தை தணிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். மிடில் வரிசையில் ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ் வலு சேர்க்கிறார்கள்.
பந்து வீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால் ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், முகமது சிராஜ் ஆகியோர் பிரதான பவுலர்களாக இருக்கிறார்கள். இங்குள்ள ஆடுகளம் சற்று வேகம் குறைந்தது என்பதால் சுழலின் தாக்கம் இருக்கக்கூடும். எனவே யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புதுமுகம் ரவி பிஷ்னோய் ஆகியோரில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அண்மையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்த இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் ஆயத்தமாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் எப்படி?
உள்ளூரில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தோடு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை எதிர்த்து மல்லுகட்ட உள்ளது. பொல்லார்ட், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன் ஆகியோரைத் தான் அந்த அணி பேட்டிங்கில் அதிகமாக சார்ந்து இருக்கிறது. பந்து வீச்சில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ள கெமார் ரோச், ஜாசன் ஹோல்டர், அகேல் ஹூசைன் நம்பிக்கை அளிக்கிறார்கள். 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயார்படுத்தும் வகையில் இந்த தொடரை பயன்படுத்திக் கொள்ள அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். வெஸ்ட்இண்டீசை பொறுத்தவரை ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால் அபாயகரமான அணி தான். அதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இதுவரை...
ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 133 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 64-ல் இந்தியாவும், 63-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 4 ஆட்டத்தில் முடிவில்லை.
இந்த மைதானத்தில் இந்திய அணி 15 ஆட்டங்களில் விளையாடி 7-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு 7 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி கண்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் 5 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானம் இடித்து புதிதாக கட்டப்பட்டு உலகின் மிகப்பெரிய மைதானமாக உருவான பிறகு இங்கு நடக்கும் முதல் ஒரு நாள் போட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற்பகல் 1.30 மணிக்கு...
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், தீபக் ஹூடா அல்லது வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், முகமது சிராஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் அல்லது குல்தீப் யாதவ்.
வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், பிரான்டன் கிங் அல்லது கிருமா பொன்னெர், நிகோலஸ் பூரன், ஷமார் புரூக்ஸ், டேரன் பிராவோ, பொல்லார்ட் (கேப்டன்), ஜாசன் ஹோல்டர், கெமார் ரோச், ஹைடன் வால்ஷ், அகேல் ஹூசைன், ஒடியன் சுமித் அல்லது ரொமாரியோ ஷெப்பர்டு.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Related Tags :
Next Story