தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி; கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது


தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி; கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 20 Feb 2022 5:00 AM IST (Updated: 20 Feb 2022 3:44 AM IST)
t-max-icont-min-icon

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்று கடைசி 20 ஓவர் போட்டியில் களம் இறங்குகிறது.

கடைசி 20 ஓவர் கிரிக்கெட்

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கோலி, பண்ட் விலகல்

முந்தைய ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும், விராட்கோலி (52 ரன்கள்), ரிஷாப் பண்ட் (ஆட்டம் இழக்காமல் 52 ரன்கள்), வெங்கடேஷ் அய்யர் (33 ரன்கள்) ஆகியோர் தங்களது அபாரமான பேட்டிங்கின் மூலம் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்ட வழிவகுத்தனர். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் எதிரணிக்கு நல்ல நெருக்கடி கொடுத்தனர். 19-வது ஓவரில் புவனேஷ்வரின் கட்டுக்கோப்பான பந்து வீச்சு ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியது. கடைசி ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றிக்கு 25 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

தொடர்ந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் (பயோ பபுள்) விளையாடி வருவதால் வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு கடைசி 20 ஓவர் போட்டியில் இருந்து விராட்கோலி, விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி சோபிக்காத விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மிடில் வரிசையில் களம் காண்பதுடன் விக்கெட் கீப்பிங் பணியையும் கவனிப்பார். தொடக்க ஆட்டக்காரராக ஆடும் வாய்ப்பு ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் களம் இறங்குகிறார். கடந்த ஆட்டங்களில் ஆடாத பவுலர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரை முழுமையாக வெல்லுமா இந்தியா?

முதலாவது ஆட்டத்தில் சொதப்பிய வெஸ்ட்இண்டீஸ் அணி கடந்த ஆட்டத்தில் கடைசி வரை இந்திய அணிக்கு சவால் அளித்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் (62 ரன்கள்), ரோமன் பவெல் (ஆட்டம் இழக்காமல் 68 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ரோஸ்டன் சேஸ், ரோகித் சர்மா, விராட்கோலி உள்பட 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கினார்.

ஒருநாள் தொடரை போல் இந்த தொடரையும் முழுமையாக கைப்பற்ற இந்திய அணி தீவிர முனைப்பு காட்டும். அதேநேரத்தில் இந்திய தொடரில் இதுவரை வெற்றி கணக்கை தொடங்காத வெஸ்ட்இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியை பெற கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரவு 7 மணிக்கு...

இங்கு இரவில் போகப் போக பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இதனால் 2-வதாக பவுலிங் செய்யும் அணியினர் பந்தை சரியாக பிடித்து வீசுவதில் சிரமம் இருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கிறது. ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீச்சையே தேர்வு செய்யும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், தீபக் சாஹர் அல்லது ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ்.

வெஸ்ட்இண்டீஸ்: பிரான்டன் கிங், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், ரோமன் பவெல், பொல்லார்ட் (கேப்டன்), ஜாசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ், அகேல் ஹூசைன், ஒடியன் சுமித், ரொமாரியா ஷெப்பர்டு, ஷெல்டன் காட்ரெல்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story