ஐ.பி.எல். கிரிக்கெட்: இன்று இரண்டு ஆட்டங்கள்


ஐ.பி.எல். கிரிக்கெட்: இன்று இரண்டு ஆட்டங்கள்
x
தினத்தந்தி 26 March 2022 9:07 PM GMT (Updated: 26 March 2022 9:07 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று டெல்லி-மும்பை, பஞ்சாப்- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

மும்பை இந்தியன்ஸ்

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் மும்பையில் நடக்கிறது. இதில் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டம் ஒன்றில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சும் கோதாவில் குதிக்கின்றன.

உள்ளூர் சூழலில் களம் காணும் மும்பை அணியில், காயத்தில் இருந்து ஓரளவு மீண்டுள்ள சூர்யகுமார் யாதவ் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார். இது அவர்களது பேட்டிங் சரிசம கலவையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். கேப்டன் ரோகித் சர்மா, ரூ.15¼ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இஷான் கிஷன், பொல்லார்ட் ஆகியோரைத் தான் பேட்டிங்கில் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. ‘அடுத்த டிவில்லியர்ஸ்’ என்று அழைக்கப்படும் தென்அப்பிரிக்காவின் இளம் பேட்ஸ்மேன் டிவால்ட் பிரேவிசின் பேட்டிங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஸ்வின் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.

டெல்லி அணி எப்படி?

டெல்லி அணியில் கேப்டன் ரிஷாப் பண்ட், பிரித்வி ஷா, அக்‌ஷர் பட்டேல், கே.எஸ்.பரத், ஜூனியர் உலக கோப்பையை வென்றுத்தந்த கேப்டன் யாஷ்துல், ஷர்துல் தாக்குர் , சர்ப்ராஸ் கான், சேத்தன் சகாரியா கவனிக்கத்தக்க வீரர்களாக உள்ளனர். சர்வதேச போட்டியில் ஆடும் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், இங்கிடி, முஸ்தாபிஜூர் ரகுமான் மற்றும் காயத்தால் அவதிப்படும் நோர்டியா உள்ளிட்டோர் இன்றைய ஆட்டத்தில் இடம் பெற வாய்ப்பில்லை.

மும்பை அணி 2013-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல். போட்டியை வெற்றியுடன் தொடங்கியதில்லை. அதாவது தங்களது முதல் ஆட்டத்தில் தொடர்ந்து 9 முறை தோற்று இருக்கும் மும்பை அணி அந்த நீண்ட சோகத்துக்கு இந்த முறையாவது முடிவு கட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த 30 ஆட்டங்களில் 16-ல் மும்பையும், 14-ல் டெல்லியும் வெற்றி பெற்றன.

கேப்டன் பதவி இல்லாத கோலி

இரவு 7.30 மணிக்கு மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் அரங்கேறும் மற்றொரு ஆட்டத்தில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய விராட் கோலி இனி நெருக்கடியின்றி சுதந்திரமாக விளையாடுவார் என்பதால் முன்பு போல் ரன்மழை பொழிவாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட மேக்ஸ்வெல், சர்வதேச போட்டி காரணமாக ஹேசில்வுட் ஆகியோர் சில ஆட்டங்களை தவற விடும் நிலை உள்ளது. இது பெங்களூரு அணிக்கு சற்று பாதகமான விஷயம். பந்து வீச்சில் முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், ஹசரங்கா மிரட்ட காத்திருக்கிறார்கள்.

பஞ்சாப் அணியை எடுத்துக் கொண்டால் கேப்டன் மயங்க் அகர்வால், ஷிகர் தவான், ஷாருக்கான் ஆகியோரின் அதிரடி ஜாலத்தை பொறுத்தே அவர்களது ரன்வேட்டை அமையும். அதே சமயம் இன்னும் அணியுடன் இணையாத நட்சத்திர வீரர்கள் காஜிசோ ரபடா, பேர்ஸ்டோ ஓரிரு ஆட்டங்களில் விளையாட முடியாது.

ரிஷப் பண்ட் இந்திய அணியின் கேப்டன் ஆவார் -பாண்டிங் கணிப்பு
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நேற்று ஆன்லைன் மூலம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல். போன்ற அதிக நெருக்கடியும், பரபரப்பும் நிறைந்த போட்டிகளில் கேப்டனாக பணியாற்றும் போது நல்ல அனுபவம் கிடைக்கும். தற்போது டெல்லி அணியின் கேப்டனாக செயல்படும் ரிஷாப் பண்ட் வருகிற ஆண்டுகளில் நிச்சயம் இந்திய அணியின் கேப்டனாவதற்கு வாய்ப்பு உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ரிஷாப் பண்டின் ஐ.பி.எல். கிரிக்கெட் பயணம் அப்படியே ரோகித் சர்மா போன்றே அமைந்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா என்ன சாதித்தாரோ அதே போன்று ரிஷாப் பண்டினாலும் செய்ய முடியும்’ என்றார்.

இவ்விரு அணிகளும் இதுவரை 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 13-ல் பெங்களூருவும் 15-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றன.

மொத்தத்தில் தொடரை வெற்றியுடன் தொடங்க அணிகள் தீவிரம் காட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.


Next Story