ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரும் விடுதலை


ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரும் விடுதலை
x

ராஜீவ்காந்தி படுகொலையில் குற்றவாளிகளான 6 பேர்களையும் சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது குறித்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பையும், காங்கிரஸ், த.மா.கா. போன்ற கட்சிகள் எதிர்ப்பையும் பதிவுசெய்துள்ளன.

ராஜீவ்காந்தி படுகொலையில் குற்றவாளிகளான 6 பேர்களையும் சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது குறித்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பையும், காங்கிரஸ், த.மா.கா. போன்ற கட்சிகள் எதிர்ப்பையும் பதிவுசெய்துள்ளன. பொதுமக்களிடையேயும் இருவேறு வகையான விமர்சனங்கள் கூறப்படுகின்றன. தமிழ்நாட்டின் மீது மிக அன்பு கொண்டவர் ராஜீவ்காந்தி. தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் வருவதென்றால், அவருக்கு கொள்ளைப்பிரியம்.

அப்படிப்பட்ட ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது, இரவு 10.25 மணிக்கு தனு என்ற பெண்மனித வெடிகுண்டு வெடித்ததில் உடல் சின்னா பின்னமாகி உயிரிழந்தார். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கறுப்பு நாளான அந்த நாளில் ராஜீவ்காந்தியுடன் அவரது பாதுகாப்பு அதிகாரி பிரதீப்குப்தா, போலீஸ் சூப்பிரண்டு முகமது இக்பால், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப் உள்பட 15 பேர் உருக்குலைந்து மரணத்தை தழுவியது வரலாற்று சோகம்.

அடுத்தநாளே இந்த வழக்கு சி.பி.ஐ. புலன்விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது. 41 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் 15 பேர் விசாரணை காலத்திலேயே இறந்துவிட்டனர். மீதமுள்ள 26 பேருக்கும் பூந்தமல்லி தடா கோர்ட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டது. பிறகு நடந்த நீண்ட நெடிய சட்டப்போராட்டங்களில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதியுள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டு, மரணத்தின் பக்கத்தில் சென்ற நிலையில், முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் நடவடிக்கைகளால், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் விடுதலைக்கும் கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் அரசுகள் முயற்சி செய்தன.

விளையாட்டு மைதானத்தில் கால்பந்து, ஆக்கி போன்ற விளையாட்டுகளில், எல்லா ஆட்டக்காரர்களும் பந்தை கடத்தினாலும் இறுதியில் ஒருவர்தான் கோல் போடுவார் என்பதுபோல, அனைவரும் முயற்சிகள் செய்த நிலையில், மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எடுத்த முயற்சிகள், சட்டப்போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றிகளின் பலனாக, முதலில் பேரறிவாளனும், இப்போது நளினி உள்பட மீதி 6 பேர்களும் விடுதலை செய்யப்பட்டனர். சுப்ரீம்கோர்ட்டு, பேரறிவாளன் விடுதலையின்போது கூறியதையே மேற்கோள்காட்டி தீர்ப்பு வழங்கியது.

2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந்தேதி தமிழக அமைச்சரவை, சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது. கவர்னர் இதன்மீது 2½ ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார். அவரும் இதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியல் சட்டம் 161-வது பிரிவின்படி, இதுபோன்ற தண்டனைக்குறைப்பு விஷயங்களில் அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர். பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு இந்த 6 பேர்களுக்கும் பொருந்தும். சிறையில் இவர்களின் நன்னடத்தை, பயின்ற கல்வி, பரோல் விதிகள், மருத்துவ ஆவணங்கள், கவர்னரின் தாமதம் ஆகியவற்றை கருத்தில் எடுத்துக்கொண்டு, சுப்ரீம் கோர்ட்டுக்குள்ள பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலைசெய்வதாக தீர்ப்பளித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தபிறகு, இதில் வேறு நடவடிக்கைகளுக்கு இடமில்லை. ஆனால், இந்த தீர்ப்பு இனி வரும்காலங்களில் பல முன்னுதாரணங்களுக்கு இடம் அளிக்கும் வகையில் இருக்கிறது என்பது மட்டும் திட்டவட்டம்.


Next Story