சரிந்து வரும் ரூபாய் மதிப்பு


சரிந்து வரும் ரூபாய் மதிப்பு
x

இந்திய பொருளாதாரத்தில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதோ? என்று அஞ்சும் வகையில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, வர்த்தகப் பற்றாக்குறைக்கு இடையில் ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்திய பொருளாதாரத்தில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதோ? என்று அஞ்சும் வகையில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, வர்த்தகப் பற்றாக்குறைக்கு இடையில் ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. ரூபாயின் மதிப்பு என்பது ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான அதன் மதிப்புதான். இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இந்தியாவின் ரூபாய் மதிப்பும், அமெரிக்க டாலரின் மதிப்பும் ஒன்று போலேயே இருந்தது. அதாவது, அன்றைய தினம் ஒரு ரூபாய் கொடுத்தால் ஒரு அமெரிக்க டாலரை வாங்கிக் கொள்ளலாம் என்றநிலை இருந்தது. ஆனால் படிப்படியாக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வந்தது.

நேற்று ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 79.32 ஆக இருந்தது. இதன் தாக்கம் நிச்சயமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை, வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரிக்கும். அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு சரிந்தால் ஏற்றுமதியாளர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். ஏனெனில், அவர்களுக்கு டாலர் விலையிலேயே பணம் கிடைக்கும். அப்படி இருக்கும்போது, ஒரு டாலருக்கு இணையான ரூபாய் அதிகமாக கிடைப்பதால், கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும் வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக வெளிநாடுகளில் வேலையோ, தொழிலோ செய்பவர்கள் இந்தியாவுக்கு டாலரில் பணம் அனுப்பினால், ரூபாய் மதிப்பில் கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம் ஏற்றுமதி பெருக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இறக்குமதியாளர்கள் கூடுதலாக விலை கொடுக்க வேண்டிய நிலை இருக்கும் என்பதால் விலைவாசி உயர வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக, கச்சா எண்ணையை வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க டாலர் விலையில்தான் வாங்குகிறோம். இப்போது கூடுதல் இந்திய பணத்தை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், பெட்ரோல்-டீசல் விலை இன்னும் உயரவும், அதன் காரணமாக ஏற்கனவே அதிகமாக இருக்கும் விலைவாசி இன்னும் அதிகமாக உயரவும் வாய்ப்பு இருக்கிறது. வெளிநாடுகளில் படிக்க செல்லும் மாணவர்களுக்கும், சுற்றுலா செல்பவர்களுக்கும், மருத்துவத்துக்காக செல்பவர்களுக்கும் செலவு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. ரூபாய் மதிப்பு இன்னும் சரிந்து ரூ.90-ஐ கடந்து செல்லவும் வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, வர்த்தக பற்றாக்குறையும் கடந்த ஜூன் மாதத்தில் அதிகரித்து இருக்கிறது. வர்த்தக பற்றாக்குறை என்றால், வெளிநாடுகளுக்கு பொருட்களை விற்கும் அளவுக்கு அதிகமாக வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்கும் நிலை, அதாவது ஏற்றுமதி மூலம் கிடைக்கும் பணத்தைவிட, இறக்குமதிக்காக செலவிடும் பணம் அதிகமாக இருக்கும் நிலையின்போது, ஏற்படுவதுதான் வர்த்தக பற்றாக்குறையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. மொத்தத்தில், இது எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், கடந்த மாதம் இறக்குமதிக்காக செலவழித்த தொகைக்கும் ஏற்றுமதி மூலம் கிடைத்த தொகைக்கும் உள்ள வித்தியாசம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 399 கோடியாகும். இதுவரையில் இல்லாத அளவு வித்தியாசமாகும் இது.

இதனால், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்கும். கடந்த நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதமாக இருந்த நிலையில், இந்த நிதி ஆண்டில் 3.3 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். வர்த்தக பற்றாக்குறை காரணமாகவே நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்குமென்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து பார்த்தால், அரசுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் இந்த நிதி ஆண்டு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்படியே போனால் எங்கு போய் முடியும்? என்ற கவலையும் இருக்கிறது. இப்போது இருக்கும் விலைவாசியைவிட இன்னும் உயர்ந்தால், மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் சிறப்பு கவனம் எடுத்துக்கொண்டால்தான் சற்று சமாளிக்க முடியும்.


Next Story