கூடுதலாக அரசு பணியாளர் தேர்வு


கூடுதலாக அரசு பணியாளர் தேர்வு
x

அரசு பணிகளில் நல்ல சம்பளம், விடுமுறை, சலுகைகள், ஓய்வூதிய பலன்கள் இருக்கிறது என்பதால் இளைஞர் சமுதாயத்தின் முதல் தேர்வு அரசு பணியாகத்தான் இருக்கிறது.

அரசு பணிகளில் நல்ல சம்பளம், விடுமுறை, சலுகைகள், ஓய்வூதிய பலன்கள் இருக்கிறது என்பதால் இளைஞர் சமுதாயத்தின் முதல் தேர்வு அரசு பணியாகத்தான் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக காவல் துறையில் எப்போதும் பணியிடங்களில் காலி இடங்கள் இருந்ததற்கு பதிலாக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எடுத்த நடவடிக்கைகளால் காலியிடம் இல்லை என்ற நிலை உருவாகப்போகிறது. 2021-ம் ஆண்டு ஆயிரம் சப்-இன்ஸ்பெக்டர்களும், 2022-ல் 444 சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர்.

விரைவில் மேலும் 600 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கான அறிவிக்கை வர இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் 2021-ல் 10 ஆயிரம் போலீஸ்காரர்களும், 2022-ல் 3,750 போலீஸ்காரர்களும் தேர்வு பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 2,955 பேர் பணியில் சேருகிறார்கள். இதில் 30 சதவீதம் பெண்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் போலீஸ் துறையில் போலீஸ்காரர்களிலும், சப்-இன்ஸ்பெக்டர்களிலும், டி.எஸ்.பி.க்களிலும் நிறைய இளைஞர்களையும், பெண்களையும் பார்க்க முடிகிறது. இதுபோல அரசு பணிகளில் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 பணியிடங்களுக்கும் அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 21-ந்தேதி கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், பில் கலெக்டர்கள், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட் உள்ளிட்ட 7 ஆயிரத்து 301 காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிக்கையை வெளியிட்டது. சில நாட்களில் இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 117 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. கடந்த மாதம் 20-ந்தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இப்போது மொத்தம் 10 ஆயிரத்து 748 காலிப்பணியிடங்களை நிரப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி 15 மாதங்களாகிவிட்டநிலையில், இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்று இருப்பார்கள். மேலும் குரூப்-4 பணிகளில் நிறைய காலியிடங்கள் இருக்கின்றன. இந்த குரூப்-4 பணிகள் அரசு நிர்வாகத்தில் அடிப்படை பணிகளாகும். மேலும் மக்களோடு நேரடி தொடர்பில் இருக்கும் பணிகள். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் பணிகளிலும், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பணிகளிலும் குரூப்-4 பணியாளர்களின் சேவை மகத்தானது.

மேலும் இப்போதுள்ள வேலை இல்லா திண்டாட்ட சூழ்நிலையில் 20 ஆயிரம் பேர்களையாவது இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற இளைஞர்கள், அரசியல் கட்சிகளின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கவேண்டும் என்பது பெரும் வேண்டுகோளாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் குரூப்-2, குரூப்-4 இரு தேர்வுகளையும் எழுதுகிறார்கள். இதில் பலர் குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த பிறகு குரூப்-2 தேர்வு முடிவில் வெற்றி பெற்றால் வேலையை விட்டு விட்டு அங்கு போய் சேர்ந்து விடுகிறார்கள். குரூப்-4 பணியிடங்களில் அடுத்த தேர்வு வரை காலியிடங்கள் ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலையை தவிர்க்க குரூப்-4 தேர்வுக்கு முன்பு குரூப்-2 தேர்வு முடிவுகளை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது.


Next Story