இந்த வருவாய்க்காகவா ரத்து?


இந்த வருவாய்க்காகவா ரத்து?
x

உலகில் எல்லோருக்கும் எந்தவித முயற்சியும் செய்யாமல் தானாக வருவது முதிய வயது.

உலகில் எல்லோருக்கும் எந்தவித முயற்சியும் செய்யாமல் தானாக வருவது முதிய வயது. தங்கள் இளமை காலத்திலும், நடுத்தர வயது காலத்திலும் சமுதாயத்துக்கும், குடும்பத்துக்கும் அயராது உழைத்து முதிய வயதில் மூத்த குடிமக்கள் என்ற அடையாளத்தோடு இனி எங்களுக்கு உழைக்க தெம்பில்லை, எங்களுக்கு தேவை ஓய்வும், சலுகைகளும், மற்றவர்களின் குறிப்பாக அரசின் உதவிகள்தான் என்ற உணர்வோடு காலத்தை ஓட்டுபவர்கள்தான் அவர்கள். வயது ஆக ஆக அவர்களுக்கான செலவுகளும் அதிகரித்துக்கொண்டே போகும்.

மேலும் போக்குவரத்து செலவும் அதிகமாகும். அந்தவகையில், ரெயில்வே நிர்வாகம் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் பயணிகளுக்கும், மூன்றாம் பாலினத்தவருக்கும் 40 சதவீத கட்டண சலுகையும் வழங்கி வந்தது. வயதான ஒரு கணவன்-மனைவி பயணம் செய்யும்போது மனைவிக்கு 50 சதவீத சலுகை, கணவனுக்கு 40 சதவீத சலுகையா? இதை மாற்றி இருவருக்குமே 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட வேண்டும் என்று மூத்த குடிமக்களிடம் இருந்து கோரிக்கை விடப்பட்டு வந்தது.

இருவருக்குமே ரெயிலில் எதிர், எதிர் லோயர் பெர்த் கொடுத்தால், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியும், மருந்து-மாத்திரைகள், உணவு கொடுக்க முடியும் என்றும் மூத்த குடிமக்கள் கோரி வந்த நிலையில், கொடிய கொரோனா வந்தது. நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்த நிலையில் மத்திய அரசாங்கம் அந்த நிலையை சீர் செய்ய ரெயில்வேயில் எடுத்த பல நடவடிக்கைகளில் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை ரத்து செய்ததும் ஒன்றாகும். அந்த நேரத்தில் எல்லோருமே குறிப்பாக மூத்த குடிமக்களும் வெளியே எங்கேயும் போனால் கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

அரசும், கூட்டம் கூடும் இடங்களுக்கு மூத்த குடிமக்கள் குறிப்பாக இணை நோய் உள்ளவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுரை வழங்கியது. இப்போது கொரோனா பாதிப்பு முடியும் தருவாயில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. மத்திய அரசாங்கத்தின் வருவாயும் உயர்ந்துவிட்டது. அதற்கு அசைக்கமுடியாத ஆதாரம் கடந்த மே மாதத்தில் மட்டும் சரக்கு சேவை வரி ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மூத்த குடிமக்களுக்கு மட்டும் ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகையை இன்னும் வழங்கவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ரெயில்வே நிர்வாகம், 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வரை ரெயில்களில் 4 கோடியே 60 லட்சம் வயதான ஆண்களும், 3 கோடியே 30 லட்சம் பெண்களும், 18 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவரும் பயணம் செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு கட்டண சலுகை வழங்காததால் ரெயில்வேக்கு கூடுதலாக ரூ.2,242 கோடி கிடைத்துள்ளது என்று பதில் அளித்துள்ளது. ஆக மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கினால் அரசுக்கு இவ்வளவுதான் செலவாகும் என்ற அடிப்படையிலும், ரெயில்வேயில் மற்றவர்கள் பலருக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வரும் நேரத்தில் மூத்த குடிமக்களுக்கும் இந்த சலுகையை மீண்டும் வழங்கவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

1 More update

Next Story