இளம் தலைமுறைக்கு இவர் ஒரு 'ரோல் மாடல்'!


இளம் தலைமுறைக்கு இவர் ஒரு ரோல் மாடல்!
x

ஸ்ரீபதியின் வெற்றி இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு ஒரு பாடமாக அமைந்துவிட்டது.

உலகில் எல்லா சிறப்புகளையும் விட கல்விதான் ஒருவருக்கு மேன்மை தரும். அத்தகைய கல்வி செல்வத்தை பெறுவதற்கு எதுவும் தடையாக இருக்க முடியாது. படிக்கவேண்டும் என்ற உத்வேகம், முயற்சி இருந்தால் நிச்சயம் கல்வியில் மிளிர முடியும் என்பதை உரிமையியல் நீதிபதி, அதாவது சிவில் ஜட்ஜ் தேர்வில் வெற்றி பெற்று பெரும் சாதனை படைத்த 23 வயது பழங்குடியின பெண் நிரூபித்து காட்டியிருக்கிறார். அவரது சாதனையை பாராட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவை பார்த்தபிறகுதான், எல்லோரையும் வியந்து பார்க்க வைத்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீபதி, 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். "பெரிய வசதிகள் இல்லாத மலை கிராம பழங்குடியின பெண், இளம்வயதில் இந்த நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணிகளில் முன்னுரிமை என்ற அரசாணை வழியே ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமைகொள்கிறேன். சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக்கூட மனமில்லாமல், தமிழ்நாட்டில் வளையவரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

ஸ்ரீபதி ஒரு மலை கிராமத்தை சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், அவரது பெற்றோர் தங்கள் குழந்தைகளை படிக்கவைக்கவேண்டும் என்பதற்காக, ஏலகிரி மலையிலுள்ள அத்தனாவூர் கிராமத்தில் குடியேறி, அங்குள்ள செயிண்ட் சார்லஸ் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் தங்கள் 3 பிள்ளைகளையும் படிக்க வைத்தனர். ஸ்ரீபதியும் முதல் வகுப்பிலிருந்து பிளஸ்-2 வரையில் அந்த பள்ளிக்கூடத்திலேயே தமிழ்வழியில் படித்துவிட்டு, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் படித்து வக்கீலானார். படிக்கும்போதே அவருக்கு திருமணமாகிவிட்டது. அவரது கணவர் வெங்கடேசன் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர். தன் மனைவியின் படிப்புக்கு அவர் உறுதுணையாக இருந்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் நீதிபதி பணியிடங்களுக்காக நடத்திய தேர்வில் ஸ்ரீபதி கலந்துகொண்டார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், முதல் நிலை தேர்விலும் முதன்மை தேர்விலும் வெற்றி பெற்ற நிலையில், தமிழ்நாடு பார் கவுன்சிலும், சைதை துரைசாமியின் மனிதநேய மையமும் இணைந்து நடத்திய நேர்முக தேர்வுக்கான பயிற்சியிலும் கலந்துகொண்டார். குழந்தை பிறந்த 2-வது நாளில் நேர்முக தேர்விலும் கலந்துகொண்டு மலையாளி பழங்குடியின இனத்தின் முதல் உரிமையியல் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளார். 6 மாத பயிற்சிக்கு பிறகு உரிமையியல் நீதிபதியாக பதவியேற்பார். ஸ்ரீபதியின் வெற்றி இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு ஒரு பாடமாக அமைந்துவிட்டது. ஏழ்மை யாருடைய முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்காது. எந்த பள்ளிக்கூடத்தில் படித்தாலும் தமிழ்வழியில் படித்தாலும் முயற்சி இருந்தால் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதற்கு ஸ்ரீபதியே எடுத்துக்காட்டு.

திருமணமான பிறகும் படிக்கலாம், ஏன் குழந்தை பெற்றாலும் வேலைக்கு முயற்சிக்கலாம் என்பதையும் ஸ்ரீபதியை பார்த்து தெரிந்துகொள்ளலாம். இளம் தலைமுறைக்கு ஸ்ரீபதி ஒரு ரோல் மாடல். தமிழ்வழியில் படித்தவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை, இதுபோல பல ஸ்ரீபதிகளை உருவாக்கும் என்ற வகையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.


Next Story