மண் காப்போம்!


மண் காப்போம்!
x

உலகில் விவசாயம் தழைக்க வேண்டும் என்றால், மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.

உலகில் விவசாயம் தழைக்க வேண்டும் என்றால், மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், மொத்த மக்கள் தொகையில், பாதிக்கு மேல் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழிலையே நம்பியிருக்கிறார்கள். நமது மூதாதையர் தழை உரம், பூச்சிக்கொல்லி மருந்து போன்ற அனைத்தையும் இயற்கை சார்ந்த முறைகளை வைத்தே பயன்படுத்தியதால், விவசாய நிலங்கள் நல்ல சத்து மிகுந்ததாக, வளம் மிக்கதாக இருந்தன.

காலப்போக்கில் இயற்கை விவசாயத்தை மறந்த விவசாயிகள் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் என அனைத்திலும் ரசாயனம் சார்ந்த இடுபொருட்களையே பயன்படுத்தி, நிலத்தின் உயிர் சத்துக்களையே உறிஞ்சி விட்டதால், நிலம் மலடாகி விட்டதோ? என்று அஞ்சத்தக்க அளவில் நிலைமை மோசமாகிவிட்டது. இந்த நிலையை மாற்ற, ஆன்மிக பணிகளோடு பல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வரும் ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் "மண் காப்போம்'' என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். ஜக்கி வாசுதேவ் ஏற்கனவே தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மரக்கன்றுகளை விவசாயிகளின் துணையோடு நடும் முயற்சியிலும் ஈடுபட்டவர்.

இப்போது "மண் காப்போம்'' திட்டத்தை கையில் எடுத்துள்ளார். உலகம் முழுவதும் விவசாய நிலங்களில் குறைந்தது 3 முதல் 6 சதவீதம் வரை தாவர, விலங்கு கழிவுகள் மற்றும் நுண்ணுயிர்கள் மூலம் மண்ணில் உருவாக்கப்படும் இயற்கை சத்து (ஆர்கனிக் கான்டென்ட்) இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான அவசர சட்டங்களையும், கொள்கைகளையும் அரசாங்கங்கள் ஏற்படுத்துவதற்கு, உலகளாவிய அளவில் ஒருமித்த கருத்துகளை உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. விவசாய நிலங்களில் மண் வளம் குறைந்து விட்டது. மண்வளம் என்பது அந்த நிலத்தில் உள்ள இயற்கை சத்துக்களின் அடிப்படையிலேயே வரையறுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இயற்கை சத்து 0.6 சதவீதம் அளவிலேயே இருக்கிறது. உலகம் முழுவதிலும் இயற்கை சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜக்கி வாசுதேவ், தனது 65-வது வயதில், தனி நபராக 100 நாட்களில் 27 நாடுகளுக்கு, 30 ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் பயணத்தை கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி லண்டனில் இருந்து தொடங்கினார். அங்கு இருந்து ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கடும் குளிரையும், கன மழையையும், பாலைவன வெயிலையும், புழுதி புயலையும் பொருட்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து, மண் காப்போம் இயக்கத்தின் நோக்கத்தை மக்களிடையே விளக்கினார்.

இஸ்லாமிய நாடுகளில் அவருடைய உரையைக் கேட்க மக்கள் வெள்ளமென திரண்டு வந்து இருந்தனர். தன் பயணத்தில் அவர் சற்றும் ஆன்மிக கலப்பு இல்லாமல், நிலத்தில் இயற்கை சத்துகளை மேம்படுத்துவதையே மையமாக வைத்து பேசியது, அனைவரின் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. இறுதியாக ஓமன் நாட்டில் இருந்து கப்பல் மூலம் மே 29-ந்தேதி குஜராத் மாநிலம் ஜாம்நகர் துறைமுகத்தில் வந்து இறங்கினார். உலக சுற்று சூழல் தினமான கடந்த ஜூன் 5-ந் தேதி டெல்லியில் நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மண் காப்போம் பயணத்தை பாராட்டி பேசினார்.

இனி ஜக்கி வாசுதேவ் தமிழ்நாட்டில் மண்வள பாதுகாப்புக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளும் தங்கள் நிலத்தில் மண் வளத்தை பாதுகாக்க, நீடித்த மண் மேலாண்மை செயல்முறைகளான குறைவான உழுதலுடன் சுழற்சி முறையில் பயிர்களை விளைவித்து, சம நிலையை பராமரிக்கவேண்டும். பலதரப்பட்ட கலப்பு பயிர்களை பயிரிட வேண்டும். நிரந்தர பசுமை (பயிர்) போர்வையை உருவாக்குதல் மற்றும் தாவர, விலங்கு கழிவுகளை மண்ணுக்கு இடுவது மூலம் தொடர்ந்து மண்வளத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே ஈஷா அமைப்பின் அறிவுரையாக இருக்கிறது.


Next Story