மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறப்பு!


மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறப்பு!
x

கடந்த ஆண்டு நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற முதல்-அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, ஐ.ஏ.என்.எஸ்.-சி ஓட்டர் நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற முதல்-அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, ஐ.ஏ.என்.எஸ்.-சி ஓட்டர் நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். அவரது செயல்பாடு திருப்தியளிப்பதாக 84.57 சதவீத தமிழக மக்கள் தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அவர் மின்னல் வேகத்தில் அனைத்து நிலைமைகளையும் ஆழமாக ஆராய்ந்து உத்தரவுகளை பிறப்பிப்பதுதான். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று (செவ்வாய்க்கிழமை) மேட்டூர் அணையிலிருந்து அவர் தண்ணீரை திறந்துவைக்கிறார்.

தமிழ்நாட்டில் நெற்களஞ்சியமாக கருதப்படும் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், சாகுபடிக்கு மேட்டூர் அணை நீரையே பெரிதும் நம்பியுள்ளனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வழக்கத்தைவிட முன்கூட்டியே தொடங்கிவிட்டதால், கர்நாடக மாநிலத்தில் நல்ல மழைபெய்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பே திருவாங்கூர் சமஸ்தானத்திடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகளால் விடப்பட்டது. மேட்டூர் அணையின் சிற்பி என்று கருதப்படும் ராயல் பொறியாளர் கர்னல் டபிள்யூ.எம்.எல்லீஸ் 1910-ல், எந்த இடத்தில் அணையை கட்டவேண்டும் என்ற அறிக்கையை தாக்கல் செய்ய, ரூ.4.80 கோடி செலவில் 1925-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டும் பணி தொடங்கி, 1934-ம் ஆண்டு முடிவடைந்தது.

அதே ஆண்டு ஆகஸ்டு 21-ந்தேதி, அப்போதைய மெட்ராஸ் கவர்னர் சர் ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டான்லியால் திறந்துவைக்கப்பட்டது. அவர் பெயரால்தான், மேட்டூர் அணை, ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்பட்டது. இவர்தான் ராயபுரம் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் 5 ஆண்டு டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர்தான் ராயபுரம் மருத்துவக் கல்லூரி, 1938-ம் ஆண்டு ஜூலை 2-ந்தேதி முதல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது.

93.50 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் சேமிப்பு உயரம் 120 அடியாகும். வழக்கமாக, தென்மேற்கு பருவமழையின்போது அணையில் நீர் இருப்பு நிலவரத்தை பொறுத்து, ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். அணை கட்டப்பட்டு 88 ஆண்டுகளான நிலையில், குறித்த தேதியான ஜூன் 12-ந்தேதி 18 முறை மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக 60 முறை தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன் 12-ந்தேதிக்கு முன்பாக 10 முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், மே மாதத்தில் 4 முறை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது, 1942-ம் ஆண்டு மே 17-ந்தேதியும், 1943-ம் ஆண்டு மே 25-ந்தேதியும், 1944-ம் ஆண்டு மே 17-ந்தேதியும், 1945-ம் ஆண்டு மே 25-ந்தேதியும் திறக்கப்பட்டது. தற்போது, 89-வது முறையாக இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிடுகிறார். சுதந்திரத்துக்கு பிறகு, முன்கூட்டியே மே மாதத்தில் தண்ணீர் திறந்துவிடுவது இதுவே முதல்முறை.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 117.42 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது. மேட்டூர் அணையின் 88 ஆண்டுகால வரலாற்றில், மே மாதத்தில் அதிகபட்சமாக நீர்மட்டம் 117 அடியை தாண்டியது இதுதான் முதல்முறை. மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடுவதன் பயனாக, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடியில் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும். இந்த விவசாயிகளுக்கு அனைத்து இடுபொருட்களும், வேளாண் கடன்களும் வழங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. எப்படி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதில் சாதனை படைக்கப்பட்டுள்ளதோ, அதுபோல இந்த ஆண்டு நெல் உற்பத்தியிலும் தமிழகம் சாதனை படைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


Next Story