தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள்

பிரதமர் நரேந்திரமோடி, நம் நாட்டின் பாதுகாப்புக்காக பாடுபட்டு பரம்வீர் சக்ரா விருதுபெற்றவர்களின் வீரத்தையும், தியாகத்தையும், துணிச்சலையும் போற்றும் வகையில், அந்தமானிலுள்ள 21 தீவுகளுக்கு அவர்களின் பெயர்களை சூட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி, நம் நாட்டின் பாதுகாப்புக்காக பாடுபட்டு பரம்வீர் சக்ரா விருதுபெற்றவர்களின் வீரத்தையும், தியாகத்தையும், துணிச்சலையும் போற்றும் வகையில், அந்தமானிலுள்ள 21 தீவுகளுக்கு அவர்களின் பெயர்களை சூட்டியுள்ளார். பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரில், 14 பேருக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக வழங்கப்பட்டாலும், 1999-ம் ஆண்டுக்கு பிறகு இந்த விருது வழங்கப்படவில்லை.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். மொத்தம் 572 தீவுகளைக்கொண்டது. இது 2 தீவு கூட்டங்களாக உள்ளது. இந்த தீவுகள் இந்து மகா சமுத்திரத்தில் இருக்கின்றன. தேன் கூட்டைப்போல இவ்வளவு தீவுகள் இருந்தாலும் 30 தீவுகளில்தான் மக்கள் வாழ்கிறார்கள். சில தீவுகளில் பழங்குடியினர், நாகரிகமே தெரியாமல் வில் அம்புகளோடு வாழ்க்கை நடத்துகிறார்கள். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில், அந்தமான் தீவுகளை யாரும் மறந்துவிட முடியாது. சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள் அந்தமான் சிறையில்தான் அடைத்து வைக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டிலிருந்து வ.உ.சி., ம.பொ.சி. போன்ற பல தலைவர்கள் அங்கு சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், கடந்த 23-ந்தேதி சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 127-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. 2021-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திரமோடி, "நேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்" என்று அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் நேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம தினமாகவே கொண்டாடப்பட்டது. நேதாஜி முதல் முறையாக இந்தியாவின் மூவர்ண கொடியை ஏற்றிய இடம் அந்தமான்தான். அவர் நினைவை நாடு மறக்கவில்லை என்று நிரூபிக்கும் வகையில், அந்தமான் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ராஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்று ஏற்கனவே பெயர்சூட்டப்பட்டது. இதுபோல நீல் தீவுக்கு, ஷாகித் தீவு என்றும், ஹாவ்லாக் தீவுக்கு சுயராஜ் தீவு என்றும் பெயரிடப்பட்டது.
நேதாஜி வாழ்ந்த அந்தமான் தீவில் அவரது வாழ்க்கையை, அவரது பங்களிப்பை என்றென்றும் நாடு நினைவு கூரும் வகையில், ஒரு நினைவிடம் கட்ட மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்த நினைவிடத்தின் மாதிரியை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் வெளியிட்டார். அந்த நினைவிடத்துக்கு அடிக்கல்லும் நாட்டினார். இந்த விழாவில்தான், இதுவரை பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு நாட்டின் பாதுகாப்புக்காக வீர தீர செயல்களில் ஈடுபட்டு பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களை பிரதமர் சூட்டினார். இதிலொருவர் தமிழர். அவர் பெயர் மேஜர் ராமசாமி பரமேஸ்வரன். இவரது பெயர் ஏற்கனவே சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியிலுள்ள அணிவகுப்பு பயிற்சி சதுக்கத்துக்கும், கோடம்பாக்கத்திலுள்ள ராணுவ வீட்டு வசதிவாரியத்துக்கும் வைக்கப்பட்டுள்ளது. 21 வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்குரியது. ஆனால், வெறுமனே தீவுகளுக்கு பெயர் வைத்துவிடுவதோடு நின்றுவிடாமல், அவர்களின் சிலைகளைக் கொண்ட மணிமண்டபங்களை அந்தந்த தீவுகளில் அமைத்து, அவர்களின் வீர தீர செயல்களை பொறித்துவைக்க வேண்டும். அந்த தீவுகளை சுற்றுலா தலங்களாக மேம்படுத்தி, அந்தமானுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த தீவுகளுக்கும் சென்றுவர ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துபவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.