ஆக்கிரமிப்புகளை, ஆகாய தாமரையை அகற்ற இதுவே சரியான நேரம்


ஆக்கிரமிப்புகளை, ஆகாய தாமரையை அகற்ற இதுவே சரியான நேரம்
x

‘நீர் இன்று அமையாது உலகு’ என்று திருக்குறளின் இரண்டாவது அதிகாரத்திலேயே அய்யன் திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

'நீர் இன்று அமையாது உலகு' என்று திருக்குறளின் இரண்டாவது அதிகாரத்திலேயே அய்யன் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். நீர் இல்லாமல் உலகம் வாழ முடியாது என்பதுதான் இதன் பொருள். நீர்தான் எல்லா வளத்துக்கும் அடிப்படையாகும். 'நீர்தான் உயிர்களுக்கு ஆதாரம். நீர் அத்தனை உயிர்களுக்கும் அமுதமாக திகழ்கிறது. குதித்தால் அருவி, ஓடினால் ஓடை, பாய்ந்தால் ஆறு, கலந்தால் கடல் என்று நீர் பல பரிமாணங்கள் கொண்டது', என்கிறார், தலைமை செயலாளர் வெ.இறையன்பு.

சங்க கால மன்னர்கள் நீர்நிலை அமைப்புகளை ஏராளமாக உருவாக்கி மழை பெய்யாத காலத்திலும் மண்ணை வளப்படுத்தினார்கள். பழங்கால மன்னர்களும், அடுத்து வந்த ஆங்கிலேயர்களும், தொடர்ந்து ஆட்சி புரிந்த அரசுகளும் பல நீர்நிலைகளை உருவாக்கியதால்தான் இன்று தமிழ்நாடு வளம் காண முடிகிறது. 'கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை' என்று இன்றும் புகழ்பாடுகிறோம். சோழ மன்னரால் அமைக்கப்பட்ட வீராணம் ஏரி, மதுராந்தகம் ஏரி, பல்லவர்களால் அமைக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி, செங்குன்றம் ஏரி, ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட பொன்னேரி ஆகியவற்றால் இன்றும் மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

முல்லை பெரியாறு அணை முழுமையடைய தன் சொந்தப்பணத்தை செலவிட்டார், பென்னிகுயிக். கல்லணையை மேம்படுத்தி மேலணை, கீழணை அமைய காரணமாக இருந்தார் ஆர்தர் காட்டன் என்ற என்ஜினீயர். மேட்டூர் அணையை வடிவமைத்தது கர்னல் எல்லீஸ். இதுபோல பாலாறு அணைக்கட்டு, திருக்கோவிலூர் அணைக்கட்டு, தொழுதூர் கதவணை, வெல்லிங்டன் நீர் தேக்கம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஆகியவை ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டவை. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் மணிமுத்தாறு அணை, வைகை அணை, அமராவதி அணை, சாத்தனூர் அணை உள்பட பல அணைகள் கட்டப்பட்டன. தொடர்ந்து அனைத்து முதல்-அமைச்சர்களும் உருவாக்கிய நீர் நிலைகள் தமிழ்நாட்டின் வளத்துக்கு சான்றாக இருக்கிறது.

இந்த நிலையில் மத்திய அரசாங்கத்தின் ஜல் சக்தி அமைச்சகம் நாடு முழுவதும் எடுத்த கணக்கெடுப்பில், தமிழ்நாட்டில் 38 ஆயிரத்து 321 குட்டைகள், 48 ஆயிரம் குளங்கள், 13 ஆயிரத்து 629 ஏரிகள், 111 நீர்தேக்கங்கள் மற்றும் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட கசிவு நீர் குட்டைகள், தடுப்பணைகள் போன்ற நீர் நிலைகள் இருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 1 லட்சத்து 6 ஆயிரம் நீர் நிலைகளில் 56 ஆயிரத்து 760 நீர் நிலைகள்தான் பயன்பாட்டில் உள்ளன என்றும், 50 ஆயிரத்து 197 நீர்நிலைகள் வற்றிப்போனது, கட்டுமான பணிகள், மணல் மேடானது, பழுது போன்ற பல்வேறு காரணங்களால் பயன்பாட்டில் இல்லை என்றும், 8 ஆயிரத்து 366 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து பயன்பாட்டில் இல்லாத அத்தனை நீர்நிலைகளையும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், ஆக்கிரமிப்புகளை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து அகற்றவும் இதுவே சரியான நேரம். இதுபோல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் பாழாக்கிக்கொண்டு தண்ணீரையே பார்க்க முடியாமல் படர்ந்து இருக்கும் ஆகாய தாமரையை அகற்றவும், தூர்வாரவும் இந்த கோடைகாலத்தில் ஒரு சிறப்பு திட்டம் வகுத்து செயல்பட்டால் மழைகாலத்தில் நீர்நிலைகளும் நிரம்பும், விவசாயிகள் உள்ளிட்ட மக்களின் மனமும் குளிரும் என்கிறார், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.


Next Story