வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களில் ஒரு லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு


வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களில் ஒரு லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடனேயே 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ரூ.80 லட்சம் கோடி பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்று தனது இலக்கை நிர்ணயித்து அறிவித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடனேயே 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ரூ.80 லட்சம் கோடி பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்று தனது இலக்கை நிர்ணயித்து அறிவித்தார். இந்த வளர்ச்சி அனைத்து துறைகளும் ஒன்று சேர்ந்து அவர் அடிக்கடி கூறும் திராவிட மாடல் வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் மிக தீவிரமாக செயலாற்றி வருகிறார். இந்த லட்சியத்தை அடைய தமிழக தொழில்துறை தொய்வில்லாமல் மட்டுமல்லாமல், 'ஜெட்' வேகத்தில் பணியாற்றிவருகிறது.

புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலாளரான கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், அதாவது 'டிட்கோ' நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்க ஊக்குவித்து வருகிறார்கள். கடந்த 15 மாதங்களில் இதற்காக தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்களுக்கான தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், நாளையை நோக்கி இன்றே-தலை நிமிர்ந்த தமிழ்நாடு என்னும் தொழில் வளர்ச்சி-4.0 என்ற நான்காம் தலைமுறைக்கான, அமைச்சர் தங்கம் தென்னரசு டிட்கோ நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்த தொழில் வளர்ச்சி மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கிவைத்தார்.

அப்போது அவர், தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்பு கொள்கை 2022-ஐ வெளியிட்டுவிட்டு, மேம்பட்ட உற்பத்திக்கான இரண்டு திறன்மிகு மையங்களை திறந்துவைத்துவிட்டு, மதுரை மற்றும் சென்னையில் ஆளில்லா விமானங்கள் என்று அழைக்கப்படும் டிரோன்களை இயக்கும் பைலட்டுகளுக்கான பயிற்சி நிறுவனங்களையும் தொடங்கிவைத்தார். சென்னை டைடல் பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த திறன்மிகு மையங்களில் ஜி.ஈ. ஏவியேஷன் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு புத்தொழில்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும். அறிவுசார் சொத்துரிமையை பயன்படுத்தி வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறைகளின் பயன்பாட்டுக்காக உலோக 3டி அச்சிடுதல், மருத்துவம் மற்றும் மோட்டார் வாகன தொழில்களில் அதிநவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்படும். இந்த திறன்மிகு மையங்களில் தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் தொழிற்சாலைகளுக்கு செல்லாமலேயே அந்த சூழலுக்கு ஏற்றவாறு மெய்நிகர் என்ற வெர்ச்சுவல் பயிற்சி அளிக்கப்படும் என்கிறார், ஜெயஸ்ரீ முரளிதரன்.

மேலும், இப்போது வேளாண் துறையானாலும் சரி, சட்டம்-ஒழுங்கு மற்றும் இதுபோல பல்வேறு துறைகளில் டிரோன்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் மென்மேலும் வளர்ச்சி அடையும். இதை இயக்கும் டிரோன் பைலட்டுகளுக்கு கடும் கிராக்கி இருக்கும். அதைக் கருத்தில் கொண்டு கோவை மற்றும் மதுரையில் டிரோன் பைலட்டுகள் பயிற்சி மையங்களை திறந்துவைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாதத்துக்கு 200 பேர் என்ற வீதத்தில், ஆண்டுக்கு 2400 பேர் பயிற்சி பெறுவார்கள் என்று பேசினார். வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களில் மட்டும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கவும், ஒரு லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, பரவலான தொழில் வளர்ச்சி அளிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இவ்வாறு பலதுறை முன்னேற்றங்களை அடையவும், தொழில்துறை எடுத்துக்கொள்ளும் இத்தகைய முயற்சிகள் வரவேற்புக்குரியது.


Next Story