நம்ம ஊரு திருவிழா!


நம்ம ஊரு திருவிழா!
x

காலம் மாறலாம். ஆனால் ஒருபோதும் நாட்டின் பழமையையும், பண்டைய கலாசாரத்தையும், நாகரிகத்தையும் மறந்து விடக்கூடாது.

காலம் மாறலாம். ஆனால் ஒருபோதும் நாட்டின் பழமையையும், பண்டைய கலாசாரத்தையும், நாகரிகத்தையும் மறந்து விடக்கூடாது. நமது பாரம்பரியம் என்ன? நமது மாநிலத்திலேயே பிற பகுதிகளில் என்னென்ன உணவு பழக்கங்கள் இருக்கின்றன? எத்தகைய கலைகள் நமது பண்பாட்டுக்கே உரியது? என்பது நவீன காலத்திலும் எல்லோருக்கும் கட்டாயம் தெரிந்து இருக்கவேண்டும். தமிழ்நாட்டிலும் நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு இன்றும் கிராமப்புற வாழ்க்கை கலாசாரம் தெரிவதில்லை. சென்னையில் உள்ளவர்களுக்கும் தமிழ்நாட்டைப் பற்றி, தமிழ் கலாசாரத்தைப் பற்றி ஒரு முழுமையான புரிதல் ஏற்படவேண்டும் என்ற நோக்கில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி நடந்த நேரத்தில் கனிமொழியின் முயற்சியால் 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி ஆண்டுதோறும் சென்னையில் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

இடையில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு மீண்டும் இந்த நிகழ்ச்சி 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில் சென்னையில் தீவுத்திடல் உள்பட 16 பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் 5 நாட்கள் தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையால் நடத்தப்படுகிறது. பொங்கல் திருநாளையொட்டி நடைபெறும் இந்த திருவிழாவை 13-ந்தேதி தீவுத்திடலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை அரசின் பல்வேறு துறைகளின் உதவியோடு முழுவீச்சில் செய்துவருகிறார்கள்.

தமிழர் வரலாற்றை, இலக்கிய செழுமையை, நாகரிகத்தை, பண்பாட்டை, கலைவடிவங்களை அடையாளப்படுத்தக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள், குறிப்பாக கலை நிகழ்ச்சிகள் இடம் பெறப்போகின்றன. தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, பொம்மலாட்டம், தெம்மாங்கு பாட்டு என சென்னை நகர மக்களுக்கு அறிமுகம் இல்லாத 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளை பார்க்கமுடியும். மேலும் தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் மக்களால் விரும்பி உண்ணப்படும் சுவையான உணவு வகைகளையும் விற்பனை செய்யும் உணவு திருவிழாவும் நடக்க இருக்கிறது.

விழாக்கள் நடக்கும் இடங்களில் கிராமிய சூழ்நிலையை உருவாக்கி பார்வையாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் உறியடி, பரமபதம், வழுக்கு மரம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இது மிகவும் வரவேற்கத்தக்க திருவிழாவாகும். சென்னை நகர மக்கள் பொங்கல் பண்டிகையை நம்ம ஊரு திருவிழாவாகவும் கொண்டாட வழி வகுக்கிறது. சென்னையைத் தொடர்ந்து கலை பண்பாட்டுத்துறையின் மண்டல தலைமையிடங்கள் அமைந்துள்ள கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, காஞ்சீபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் நம்ம ஊரு திருவிழா நடத்தப்படும் என்று அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. சென்னையில் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஒரு மாற்றுகூட குறையாமல் இந்த நிகழ்ச்சிகள் அங்கு நடத்தப்படவேண்டும். இந்த 7 நகரங்களில் மட்டுமல்லாமல், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நம்ம ஊரு திருவிழாவை அந்தந்த ஊர் பெயர்களில் சங்கமம் என்று நடத்துவது பற்றி கலை பண்பாட்டுத்துறை பரிசீலிக்கவேண்டும். இதுபோன்ற திருவிழாக்களை நடத்துவதன்மூலம் மக்களுக்கும் தமிழ்நாட்டின் பண்பாட்டின் மீது ஒரு பிடிப்பு ஏற்படும் என்பதோடு மட்டுமல்லாமல், நசிந்துவரும் நாட்டுப்புற கலைகளுக்கும் புத்துயிர் அளிக்கமுடியும், அந்த கலைஞர்களுக்கும் வாழ்வாதாரம் சிறக்கும்.


Next Story