போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம்


போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம்
x

தமிழகம் முழுவதும் கடந்த 27-ந்தேதி முதல் போக்குவரத்து விதிமீறலுக்கு மிக அதிகமாக அபராதம் விதிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த 27-ந்தேதி முதல் போக்குவரத்து விதிமீறலுக்கு மிக அதிகமாக அபராதம் விதிக்கப்படுகிறது. கையிலே பணம் இல்லையென்றாலும் விடுவதில்லை. மின்னணு முறையில் கையில் உள்ள செல்போன் மூலமாக பணம் கட்ட சொல்லிவிடுகிறார்கள். பழைய அபராதத்தைவிட இப்போது பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பஸ்சில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தால் முன்பு ரூ.200 அபராதம் விதித்த நிலையில், இப்போது ரூ.500 அபராதம் கட்ட வேண்டும். அதிக வேகமாக மோட்டார் வாகனத்தை ஓட்டினாலோ, செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்தாலோ முதல் தடவை ஆயிரம் ரூபாயும், மீண்டும் அதே தவறை செய்து பிடிபட்டால் ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படுகிறது. 'ஹெல்மெட்' அணியாமல் மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டரில் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட சொல்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல் இருவருக்கு மேல் பயணம் செல்வதெல்லாம் இனி முடியாது. அதற்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் உண்டு. சாலைகளில் 'பைக் ரேஸ்'களை பார்ப்பது சகஜமாகிவிட்டது. இப்போது 'பைக் ரேஸ்'சில் சென்றால் முதல்முறை ரூ.5 ஆயிரமும், இரண்டாவது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் கட்ட வேண்டும். ஆம்புலன்ஸ்கள், தீயணைக்கும் படை வாகனங்கள் போன்ற அவசரகால வாகனங்களுக்கு உடனடியாக வழி விட்டுவிட வேண்டும். இல்லையென்றால் அந்த இடத்திலேயே ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதுதான் பல விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது. இத்தகைய குற்றங்களை, அதாவது மது அருந்திவிட்டு கார் மற்றும் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் இல்லை, அவருடன் அதே வாகனத்தில் பயணிப்பவர்களுக்கும் இனி ரூ.10 ஆயிரம் அபராதம் உண்டு. கார்களில் 'சீட் பெல்ட்' அணிவது விபத்து நேரிடும் சமயங்களில் உயிரை காப்பாற்றுகிறது. ஆனால் பொதுவாக பலர் 'சீட் பெல்ட்' அணிவதில்லை. இதுவரை அதற்காக ரூ.100 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இப்போது ஆயிரம் ரூபாய் அபராதமாகிவிட்டது. இதுபோல மேலும் பல வீதிமீறல்களுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அபராத உயர்வு சாதாரண ஏழை - எளிய கிராமப்புற மக்களுக்கு பெரும் கஷ்டமாகும்.

இந்த அபராதத்தை தமிழக அரசு தானாக உயர்த்தவில்லை. மத்திய அரசாங்கம் கடந்த 2019-ம் ஆண்டில் இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை உயர்த்தி மோட்டார் வாகனங்கள் திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. அந்த சட்டப்படியே இந்த அபராதத்தொகையை உயர்த்த வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உள்ளது. பெருகிவரும் விபத்துகளை தடுக்க இந்த அபராத உயர்வு தவிர்க்க முடியாததாகிறது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிக அபராதம் ஓரளவுக்கு வாகனம் ஓட்டுபவர்களை விதிகளை கடைப்பிடிக்க தூண்டும். ஆனால் இதனால் மட்டும் விதிமீறல்களை தடுக்க முடியாது என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து நாடுகளில் நடந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாலைகளை குண்டும் குழியுமாக, வளைந்தும் நெளிந்தும் வைத்துக்கொண்டு விபத்துகளை தடுக்க முடியாது. போக்குவரத்து சிக்னல்கள் முறையாக எரிய வேண்டும். போக்குவரத்து போலீசார், போக்குவரத்து துறையினரின் சீரான பணிகள் என்று எல்லாமே ஒன்றுபோல சேர்ந்தால்தான் விபத்துகளை தடுக்கமுடியும்.


Next Story