தமிழக போலீசுக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி


தமிழக போலீசுக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி
x

ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக கருதப்படும் தமிழக போலீசுக்கு பல சிறப்புகள் உண்டென்றாலும், இப்போது மிக உச்ச சிறப்பாக ஜனாதிபதியின் விருது மற்றும் சிறப்பு கொடி என்று அழைக்கப்படும் தனிக் கொடி கிடைத்துள்ளது.

ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக கருதப்படும் தமிழக போலீசுக்கு பல சிறப்புகள் உண்டென்றாலும், இப்போது மிக உச்ச சிறப்பாக ஜனாதிபதியின் விருது மற்றும் சிறப்பு கொடி என்று அழைக்கப்படும் தனிக் கொடி கிடைத்துள்ளது.

இந்தியாவின் முதல் போலீஸ் துறை, 1856-ல் அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையில்தான் உருவாக்கப்பட்டது. எனவே, போலீஸ் துறையின் முன்னோடி சென்னை என்ற பெயர் உண்டு. இது மட்டுமல்லாமல், இந்திய போலீசில் முதல் கைரேகை பிரிவு, தடய அறிவியல் பிரிவுகள், வயர்லெஸ் அமைப்பு, கடலோர காவல் படை என்று பல பிரிவுகள் தமிழக போலீசில்தான் தொடங்கப்பட்டது. 1984-ம் ஆண்டிலேயே தமிழக போலீசில் உள்ள கடலோர காவல் படை, கடலுக்குள் அதிவேக படகில் ரோந்து செல்லும் பணியை தொடங்கியது.

இத்தகைய பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட தமிழக போலீசுக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடியை வழங்கவேண்டும் என்று கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது கேட்டதற்கிணங்க, 2009-ல் அதற்கான ஆணை தமிழக போலீஸ் துறையின் 150-வது ஆண்டு விழாவை கொண்டாடிய நேரத்தில் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக அந்த சிறப்பு கொடி தமிழக போலீசுக்கு கிடைக்கவில்லை. "எப்போதும் நான் கலைஞரின் அடியொற்றியே என் ஆட்சியை நடத்திவருகிறேன்" என்று பெருமைபட கூறிவருகிறார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதை உறுதிப்படுத்துவதுபோல, கருணாநிதி ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்ட ஜனாதிபதியின் சிறப்பு கொடி, அவரது மகன் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கிடைத்திருப்பது மிகவும் புகழ் சேர்க்கிறது. இத்தகைய சிறப்பு, நாட்டுக்காக சீர்மிகு சேவையாற்றிய ராணுவம், துணை ராணுவ படைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள போலீஸ் துறைக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில், முதல் முதலாக 1951-ல் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தால் கப்பல் படைக்கு வழங்கி பெருமை சேர்க்கப்பட்டது. இதுவரையில், 10 மாநிலங்களுக்கு இந்த கொடி வழங்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் இந்த சிறப்பைப்பெறும் முதல் மாநிலம் தமிழ்நாடுதான்.

ஜனாதிபதியின் கலர் என்று அழைக்கப்படும் விருதையும், சிறப்பு கொடியையும் முதலில் வடிவமைத்தது இந்திய ரூபாய் சின்னத்தை வடிவமைத்த கவுகாத்தி ஐ.ஐ.டியின் வடிவமைப்பு துறை பேராசிரியர் டி.உதயகுமார்தான். தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் கொடியை வடிவமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையைப் பெற்று, டி.ஜி.பி.சைலேந்திரபாபு செய்து வருகிறார். இந்த கொடியை தமிழக போலீஸ் பெறும் நிகழ்ச்சி போலீசாரின் அலங்கார அணிவகுப்பு மரியாதையின்போதுதான் பெறமுடியும். இந்த விருதையும், சிறப்பு கொடியையும் வழங்க வரவேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு முதல்-அமைச்சர் விடுத்த அழைப்பை, அவர் உடனே மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

வருகிற 22-ந் தேதி சென்னையில் நடக்கும் இந்த விழாவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்க, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்த சீரிய சிறப்பை தமிழக போலீஸ் துறைக்கு வழங்குகிறார். இந்த அலங்கார அணி வகுப்பில் தமிழக போலீசில் உள்ள அனைத்து பிரிவினரும், தமிழகம் முழுவதிலும் இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில், தமிழக போலீசில் டி.ஜி.பி.யாக பணிபுரியும் சைலேந்திர பாபு உள்பட ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 491 போலீசார், அதிகாரிகள் அனைவருக்குமே மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரும் தோள் பட்டையில் இந்த தனிக் கொடி சின்னத்தை இனி பொறித்துக் கொள்வார்கள். இது அவர்களுக்கு தனி அந்தஸ்தை கொடுக்கும். இந்த தனிக் கொடி சின்னத்தை தோளில் அணிந்து கொள்ளும் பெருமையைப் பெற்றுள்ள தமிழக போலீசார் அனைவரும், தங்கள் பணிக்கு புகழ் சேர்க்கும் வகையில் கடமை ஆற்றி, "இதுதாண்டா தமிழக போலீஸ்" என்ற பெயரை இந்தியா முழுவதும் பெற வேண்டும்.


Next Story