போக்குவரத்து கழகங்களில் தனியார் பங்களிப்பு


போக்குவரத்து கழகங்களில் தனியார் பங்களிப்பு
x

தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்களில் பதிலளித்து பேசிய அமைச்சர்கள், பல அறிவிப்புகளை வெளியிட்டனர்.

தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்களில் பதிலளித்து பேசிய அமைச்சர்கள், பல அறிவிப்புகளை வெளியிட்டனர். இதுதவிர அவர்கள் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்புகளிலும் அரசின் பல கொள்கைகள், அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், அவருடைய மானியக்கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளிக்கும்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பஸ்களிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள், தற்போது 3 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. ஏற்கனவே 3 வயது வரை என்று இருந்த இலவச பயணம், இப்போது 5 வயதாக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்தார். இது மிகவும் வரவேற்கத்தக்க அறிவிப்பாகும்.

பதவியேற்ற முதல் நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்ட முதல் உத்தரவின்படி, அனைத்து பெண் பயணிகளும் சாதாரண கட்டண நகர பஸ்களில் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் தினமும் 36 லட்சம் பெண் பயணிகள் பயணம் செய்கிறார்கள். ஒரு தாய் பஸ்சில் இலவசமாக பயணம் செய்யும்போது, அவர் மடியில் உட்கார்ந்திருக்கும் குழந்தைக்கு அரை டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை இப்போது மாற்றப்பட்டுவிட்டது. இதன் மூலம் தினமும் 3 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளில் இடம் பெறாத முக்கிய ஒரு கொள்கை முடிவு, கொள்கை விளக்கக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக பஸ்களின் இயக்கம், பராமரிப்பை தனியார்வசம் கொடுக்கும் அறிவிப்புதான் அது. 'நிகர செலவு ஒப்பந்த மாதிரி' என்பது ஒரு பொது -தனியார் குறித்த மாதிரியாகும். போக்குவரத்து வலைதளங்களை நிர்வகிக்கும் பொறுப்பு, வருவாய் ஈட்டுதல் அரசு போக்குவரத்து கழகங்களால் மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம் பஸ்களை வாங்குதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை அதை இயக்குபவரின் (தனியார்) பொறுப்பாகும். பயணிகளுக்கான சேவைகளின் நிலை மற்றும் தரத்துக்கு அரசு போக்குவரத்து கழகங்கள் பொறுப்பாகும். பஸ்களை இயக்குபவருக்கு கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் வழங்கப்படும். பஸ்கள் கொள்முதல் செய்ய போக்குவரத்து கழகத்துக்கு தேவைப்படும் பெரும் மூலதன செலவை குறைப்பதே இந்த நிகர செலவு ஒப்பந்த மாதிரியால் ஏற்படும் பெரும் நன்மையாகும். கூடுதலாக உதிரிபாகங்கள் மற்றும் பிற நுகர்பொருட்களை பராமரிப்பதற்காக மாநில போக்குவரத்து நிறுவனத்துக்கு தேவைப்படும் பெரும் மூலதன செலவினம் குறைக்கப்படுகிறது. மேலும், பராமரிப்பு மற்றும் இதர ஊழியர்களின் ஊதியத்துக்கான செலவும் குறைக்கப்படுகிறது. மொத்த செலவு ஒப்பந்த மாதிரி முறையை பின்பற்றுவதால் ஒப்பந்த காலம் முழுவதும் கணிசமான சேமிப்பு மற்றும் மேம்பட்ட செயல் திறனை அடைய முடியும் என்று கொள்கை விளக்கக்குறிப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுதோறும் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.6,488 கோடியே 74 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை மக்களின் வரிப்பணத்தால்தான் ஈடுகட்ட முடியும். மேலும், எந்த சேவை என்றாலும் அரசுடன் தனியார் பங்களிப்பும் மிக மிக அவசியமாகும். இதுபோன்ற தனியார் பங்களிப்பு டெல்லியிலும், ஆமதாபாத்திலும் கூட செயல்படுத்தப்பட்டன. தனியார் முதலீடுகளை அரசு ஊக்குவித்துக்கொண்டு இருக்கும் நிலையிலும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் தொடர் நஷ்டங்களில் இருந்து மீளவும் இந்த பங்களிப்பு வரவேற்கத்தக்கது. அரசுக்கும் செலவு மிச்சமாகும். மேலும், நிறைய புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். தனியார் பராமரிப்பின் இயக்கத்தில் ஓடும் பஸ்களுக்கும், அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கும் பொதுமக்களுக்கு அளிக்கும் சேவைகள், வசதிகளில் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவும் என்பதால், அதன் பலன் பொதுமக்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.


Next Story