டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் பாதுகாப்பு

கத்தியை டாக்டர்கள் கையில் எடுக்கும்போது உயிர்கள் காக்கப்படுவதும், அதையே ஒரு குற்றவாளி கையில் எடுக்கும்போது உயிருக்கு பாதிப்பு ஏற்படுவதும் மீண்டும் ஒரு சம்பவம் மூலம் நிரூபணமாகியுள்ளது.
கத்தியை டாக்டர்கள் கையில் எடுக்கும்போது உயிர்கள் காக்கப்படுவதும், அதையே ஒரு குற்றவாளி கையில் எடுக்கும்போது உயிருக்கு பாதிப்பு ஏற்படுவதும் மீண்டும் ஒரு சம்பவம் மூலம் நிரூபணமாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, கேரளாவில் ஒரு இளம் பெண் டாக்டர், சிகிச்சைக்கு வந்த குடிபோதையில் இருந்த ஆசிரியரால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. தன்னை சிலர் தாக்கியதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு டெலிபோன் செய்த சந்தீப் என்ற ஆசிரியரை, ரோந்து சென்ற போலீசார் மீட்டு, கொல்லத்திலுள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த 25 வயதுடைய ஹவுஸ் சர்ஜன் டாக்டர் வந்தனா தாஸ் சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென்று மேஜையில் இருந்த 2 கத்தரிக்கோல்களை சந்தீப் எடுத்து, சரமாரியாக குத்தினார். இதில், டாக்டர் வந்தனா தாசுக்கு கழுத்து, தலை, முதுகு தண்டு, வயிறு, மார்பு என 11 இடங்களில் காயம் ஏற்பட்டது. தடுக்க முயன்ற போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஊர்காவல் படையை சேர்ந்த ஒருவர் மற்றும் சிகிச்சைக்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர் இருவரும் சரமாரியாக தாக்கப்பட்டனர்.
படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த டாக்டர் வந்தனா தாஸ், திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மட்டுமல்லாமல், மருத்துவ கல்லூரி மாணவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கேரள ஐகோர்ட்டு இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், "டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாவிட்டால் மருத்துவமனைகளை இழுத்து மூடுங்கள்" என்று கடுமையாக சாடியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கேரள அரசாங்கம் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் வகையிலான ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டிலும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்துவருகின்றன. சிகிச்சைக்கு கொண்டுவரப்படும் நோயாளியின் உயிரை காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கத்திலேயே டாக்டர்களும், நர்சுகளும் சிகிச்சையளிக்கிறார்கள். ஆனால், சிகிச்சையை உடல் ஏற்றுக்கொள்ளாத நிலையில், சில நேரங்களில் நோயாளிகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு டாக்டர்களோ, நர்சுகளோ பொறுப்பல்ல என்றாலும், இறந்தவரின் குடும்பத்தினர் ஆத்திரத்திலோ, குடிபோதையிலோ அவர்களை தாக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. மருத்துவமனைகளும் சூறையாடப்படுகின்றன.
இதுபோன்ற சம்பவங்களில், புகார் செய்யும் நடைமுறை இருந்தாலும், டாக்டர்களும், நர்சுகளும் அளிக்கும் புகாரை ஏற்று, உடனடியாக போலீஸ் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் பல டாக்டர்கள், "உயிருக்கு போராடும் நிலையில் நோயாளிகள் வரும்போது, உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள். அங்கு போனால்தான் காப்பாற்ற முடியும்" என்று அனுப்பி விடுகிறார்கள். தங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்தால், அவர்களே உடனடியாக சிகிச்சையளித்து சிலரை காப்பாற்றவும் முடியும்.
இதுபோன்ற சம்பவங்களை சட்டத்தால் தடுத்து நிறுத்தமுடியாது. டாக்டர்களும், நர்சுகளும் நோயாளிகளின் உயிரை காப்பாற்றத்தான் பாடுபடுகிறார்கள். எனவே, நோயாளிகளும், உறவினர்களும் அவர்களிடம் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும், அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கோபமோ, ஆத்திரமோ பட தேவையில்லை என்ற விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தவேண்டும்.






