சிறையில் இருந்து விடுதலை


சிறையில் இருந்து விடுதலை
x

இந்த ஆண்டு சுதந்திர திருநாள் 75-வது அமிர்த பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தலைவர்களின் பிறந்த நாட்களின்போதும், சிறையில் வாடும் கைதிகளுக்கு விடுதலையை வழங்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.

இந்த ஆண்டு சுதந்திர திருநாள் 75-வது அமிர்த பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தலைவர்களின் பிறந்த நாட்களின்போதும், சிறையில் வாடும் கைதிகளுக்கு விடுதலையை வழங்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். அதுபோல 75-ம் ஆண்டு சுதந்திர நன்னாளிலும், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அடைபட்டுக்கொண்டு இருக்கும் கைதிகளுக்கும் விடுதலை வழங்க வேண்டும் என்று வந்த கோரிக்கைகளின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது.

இதன்படி, தங்கள் சிறை தண்டனை காலத்தில் பாதி காலத்தை நிறைவு செய்து, 3 ஆண்டுகளாக சிறைகளில் எந்த தண்டனையையும் பெறாமல், நன்னடத்தையோடு இருக்கும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரை 3 கட்டங்களாக, அதாவது இந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்றும், அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்றும், மீண்டும் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்றும் விடுதலை செய்ய வேண்டும். இதுபோல தங்கள் தண்டனை காலத்தில் 66 சதவீதத்தை கழித்த 70 சதவீதத்துக்கு மேல் கழித்த உடல் ஊனமுற்றோர், கடும் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆகியோருக்கு சிறப்பு திட்டமாக மன்னிப்பு வழங்க வேண்டும். மேலும் சிறை தண்டனையோடு அபராதமும் விதிக்கப்பட்ட சிறைவாசிகளில், தண்டனை காலத்தை பூர்த்தி செய்து அபராதம் கட்ட வசதியில்லாமல் ஏழ்மை நிலையில் உள்ள சிறைவாசிகளின் அபராதத்தை ரத்து செய்து விடுதலை செய்யலாம். இதுபோல 18 வயது முதல் 21 வயது உள்ள காலத்தில் செய்த குற்றங்களுக்காக சிறையில் வாடும் கைதிகளில் 50 சதவீத காலத்தை கழித்து, வேறு குற்றப்பின்னணி இல்லாதவர்களை விடுதலை செய்யலாம்.

இப்படி விடுதலை செய்யும் காலங்களில், அவர்களின் வயது அத்தாட்சியாக மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது பிறப்பு சான்றிதழில் உள்ள வயதை கணக்கிட்டுக்கொள்ளலாம். இது இரண்டும் இல்லாத கைதிகளுக்கு என்ன செய்யலாம்? என்று எழும் கேள்விக்கும் இந்த ஆலோசனையில் வழி கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்ட வயதையே கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அளிக்கப்படும் விடுதலையில், சில கைதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்பு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட கைதிகள், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், பயங்கரவாத குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள், வரதட்சணை கொலைக்காக தண்டனை பெற்றவர்கள், கள்ள நோட்டு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், ஆள் கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள், பொருளாதார குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள், போதை மருந்து வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் ஆகியோர் இந்த தண்டனை குறைப்புக்கு தகுதி உள்ளவர்கள் அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசுகள், கைதிகளை தேர்வு செய்வதற்காக குழு அமைக்கவேண்டும். அந்த குழுவின் பரிந்துரையைப் பெற்று, அரசு யார் யார் தண்டனை குறைப்புக்கு தகுதியானவர்கள் என்று ஆய்வு செய்து, இதற்கான பட்டியலை கவர்னருக்கு அனுப்பி ஒப்புதலை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஆனால் சிலருக்கு இது பொருந்தாது என்று கூறிய பட்டியலை மறுபரிசீலனை செய்து, சந்தர்ப்ப சூழ்நிலையால், உணர்ச்சி வேகத்தால் குற்றங்கள் செய்தவர்களையும் விடுதலை செய்யவும் ஆலோசிக்கலாம். தண்டனை என்பது குற்றவாளிகளை திருத்துவதற்காகத்தானே தவிர ஆயுள் முழுவதும் அடைத்து வைப்பதற்கு அல்ல. தமிழக அரசு இதற்கான குழுவை அமைத்து உடனடியாக தண்டனை குறைப்புக்கான பட்டியலை தயாரிக்க வேண்டும். ஒருமுறை குற்றம் செய்தவர்களை எப்போதும் குற்றவாளிகளாக கருதக்கூடாது. தண்டனை அவர்களை திருத்தியிருக்கும். விடுதலை பெற்றவர்களும் பழையவற்றை மறந்து புது வாழ்வு தொடங்க வேண்டும்.


Next Story