அரும்புகழ் கலைஞருக்கு பெரியார்-அண்ணா நடுவில் சிலை!


அரும்புகழ் கலைஞருக்கு பெரியார்-அண்ணா நடுவில் சிலை!
x

அரும்புகழ் கலைஞருக்கு பெரியார்-அண்ணா நடுவில் சிலை.

அரும்புகழ் கலைஞருக்கு பெரியார்-அண்ணா நடுவில் சிலை. அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தது மிகவும் புகழுக்குரியது, போற்றுதலுக்குரியது. இந்த விழாவில் கலைஞரின் மேன்மைகளை விளக்கி அவர் சூட்டிய புகழாரம் அவரது புகழுக்கு மேன்மை அளித்தது. 12 அடி உயரம் கொண்ட பீடத்தில் 16 அடி உயரமுள்ள வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தில் கலைஞர் கருணாநிதியின் முத்தான 5 கட்டளைகளான, "அண்ணா வழியில் அயராது உழைப்போம்! ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்! இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்! வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்! மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி" என்ற அவரது கொள்கைகள் பொறிக்கப்பட்டுள்ளது மனதை நெகிழவைக்கிறது.

கலைஞர் கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டவரும், தமிழ்நாட்டை, தான் பிறந்த மாநிலத்துக்கு இணையாக கருதி, தமிழ் மீதும் அதிகப்பற்றுகொண்டவர் வெங்கையா நாயுடு. மற்றும் இந்த சிலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டதில் பல சிறப்புகள் உண்டு.

தந்தை பெரியாரின் கொள்கைகளை ஆரம்பகாலம் முதல் நெஞ்சில் பதித்து பின்பற்றிய அவருக்கு ஒரு பக்கம் பெரியார் சிலைக்கு அருகிலும், அறிஞர் அண்ணாவை எப்போதும் தன் நெஞ்சிலே போற்றி வணங்கிக்கொண்டிருந்தவர் என்ற வகையில், அண்ணா சிலை அருகே கூப்பிடும் தூரத்திலும் சிலை அமைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. மேலும், ஓமந்தூரார் அரசினர் தோட்ட கட்டிடம் கலைஞர் கருணாநிதியின் கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டது. அவருடைய ஆலோசனையின் பேரில்தான் எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. கட்டிடப்பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது, அவ்வப்போது வந்து பார்த்தவர் கருணாநிதி. அத்தகைய ஓமந்தூரார் தோட்டத்தில் நவீன தமிழ்நாட்டின் சிற்பியும், அடையாளமுமான கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது, அவரது புகழுக்கு கூடுதல் பெருமை சேர்க்கிறது.

தமிழ்நாட்டில் பல தலைவர்களுக்கு சிலை அமைத்திட காரணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு சிலை அமைக்க தந்தை பெரியார் முடிவெடுத்தபோது, அதை எவ்வளவோ மறுத்துப்பார்த்த கலைஞரால், பெரியாரின் ஆணையை மறுக்க முடியவில்லை. பெரியாரின் மறைவுக்குப்பிறகு, அன்னை மணியம்மையார், திராவிடர் கழகத்தின் சார்பில் அண்ணா சாலையில் கலைஞருக்கு சிலை அமைத்தார். எம்.ஜி.ஆர். மறைவெய்திய நேரத்தில் ஒரு இளைஞர் கலைஞரின் சிலையை கடப்பாரை கொண்டு தகர்த்தெறிந்தார். அப்போதும், கலைஞர் மனம் துவளவில்லை, பதைபதைக்கவில்லை, கோபப்படவில்லை. மாறாக, "அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை-நெஞ்சிலேதான் குத்துகிறான். அதனால் ஏற்பட்ட நிம்மதி எனக்கு! வாழ்க!! வாழ்க!!" என்று கவிதை படைத்தார்.

அண்ணா சாலையில் கலைஞருக்கு சிலை அமைக்க திராவிடர் கழகம் எல்லா அனுமதிகளையும் பெற்றிருந்தாலும், பொது இடங்களில் சிலை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையை கருத்தில் கொண்டு, அது ஏற்கனவே பெற்ற அனுமதிக்கு பொருந்தாது என்றாலும், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் 19 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்து 5 முறை அரசு கட்டிலில் ஆட்சியை நடத்திய கலைஞர், தமிழக நன்மைக்காக பல அளப்பரிய திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக அன்னை தமிழ்மொழிக்கு செம்மொழி தகுதி வாங்கித்தந்தவர் கலைஞர். மகளிருக்கு சொத்தில் பங்குண்டு என்ற சட்டத்தை கொண்டுவந்தவர்.

அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டுவந்தவர். இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும் திராவிட மாடல் ஆட்சிக்கு வித்திடும் வகையில், அனைத்து துறை வளர்ச்சிகளுக்கும் புதிய புதிய திட்டங்களை கொண்டுவந்தவர். கட்சி எல்லைகளை தாண்டி, இந்திய அரசியலுக்கே வழிகாட்டியாக இருந்து தமிழினத்துக்காக நீண்டதூரம் ஓடிய கலைஞர் இன்று அதிக உயரத்தில் சிலையாக நிற்பது தமிழர்களின் வணக்கத்துக்குரியதாக இருக்கிறது. தமிழகம் இன்று மகிழ்கிறது, உணர்ச்சி பெருவெள்ளத்தால் நெகிழ்கிறது. இந்த தலைமுறை மட்டுமல்லாமல் வருங்கால தலைமுறைகளும் இந்த பிரமாண்ட சிலையை வணங்கும், போற்றும்.


Next Story