வாடகைத் தாய் ஒழுங்குமுறை சட்டம்


வாடகைத் தாய் ஒழுங்குமுறை சட்டம்
x

அய்யன் திருவள்ளுவர் எல்லா செல்வத்தையும்விட குழந்தை செல்வத்தை பெரும் பேறாக கூறியுள்ளார். ‘குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்’, என்று ஒரு குறளை எழுதியுள்ளார்.

அய்யன் திருவள்ளுவர் எல்லா செல்வத்தையும்விட குழந்தை செல்வத்தை பெரும் பேறாக கூறியுள்ளார். 'குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்', என்று ஒரு குறளை எழுதியுள்ளார். குழந்தை செல்வத்தை இயற்கையாகவே பெறமுடியாத நிலையில் இருப்பவர்களில் சிலர் குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்கிறார்கள். தங்கள் உயிரணுவில் பிறந்த குழந்தைகள் வேண்டும் என்று நினைப்பவர்கள் வாடகைத் தாய்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

மருத்துவமனையில் மனைவியின் கருமுட்டையை எடுத்து அதில் கணவரின் உயிரணு செலுத்தப்பட்டு வாடகைத் தாயின் கர்ப்பப்பையில் வைக்கப்படுகிறது. அங்கு குழந்தை வளர்ந்து பிரசவத்தின் மூலம் பிறக்கிறது. இந்தநிலையில் நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டனர். 4 மாதங்களுக்கு பிறகு, கடந்த 9-ந்தேதி டுவிட்டரில் அவர்கள் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தனர். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. வாடகைத் தாய் ஒழுங்குமுறை சட்டம் அமலுக்கு வந்துள்ள பிறகு இது எப்படி? என்று சர்ச்சைகள் கிளம்பின. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்கிறது' என அறிவித்துள்ளார்.

2002-ம் ஆண்டில் வணிக ரீதியான வாடகைத் தாய் முறை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது. இதில் பல முறைகேடுகள் நடந்ததால் இதை முறைப்படுத்த வாடகைத் தாய் ஒழுங்குமுறை சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபின், ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டு இந்தாண்டு ஜனவரி 25-ந்தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டப்படி திருமணமான தம்பதி மாவட்ட மருத்துவ அதிகாரியின் பரிந்துரையைப் பெற்ற பிறகே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளமுடியும்.

ஆணுக்கு 26 வயது முதல் 55 வயது வரையிலும், பெண்ணுக்கு 25 வயது முதல் 50 வயது வரையிலும் இருக்கலாம். தம்பதிக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும். அவர்களுக்கு குழந்தை இருக்கக்கூடாது. இதுபோல வாடகைத் தாயும் தம்பதிக்கு நெருங்கிய உறவினராகவும், 25 வயது முதல் 35 வயதுள்ளவராகவும், திருமணமானவராக, குழந்தை பெற்றவராகவும், வாழ்வில் ஒருமுறை மட்டுமே வாடகைத் தாயாக இருப்பவராகவும் இருக்க வேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அதாவது வணிக ரீதியான வாடகைத் தாய் முறைக்கு, பணத்துக்காக கருமுட்டையை விற்பவர்களுக்கு, இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு, வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தையை கைவிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கமுடியும். ஜனவரி 25-ந்தேதி அமலுக்கு வந்த இந்த சட்டத்தின் 53-வது பிரிவின்படி 'ஜெஸ்டேஷன் பீரியட்' என்று கூறப்படும் ஏற்கனவே இருக்கும் கருவுற்றகாலம் என்ற வகையில் 10 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 25-ந்தேதிக்கு முன் வாடகைத் தாயாக கருவுற்ற பெண்ணுக்கு இந்த சட்டத்தில் 10 மாத காலத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த சட்டம் முழுமையாக நவம்பர் 25-ந்தேதிக்கு பிறகுதான் அமலுக்கு வரமுடியும். இந்த சட்டம் எதிர்பார்க்கும் நோக்கம் நிறைவேற்றப்படவேண்டும் என்றால் இந்த சட்டம் குறித்து விரிவான விழிப்புணர்வு வேண்டும். மருத்துவமனைகளும் இதில் கவனமாக இருக்கவேண்டும்.


Next Story