தேமதுர தமிழோசை பரவுகிறது!


தேமதுர தமிழோசை பரவுகிறது!
x

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்ற பாட்டில், “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்” என்று பாடினார் மகாகவி பாரதியார் அன்று.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்ற பாட்டில், "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" என்று பாடினார் மகாகவி பாரதியார் அன்று. அந்த பணிகளை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். உலகில் மிக தொன்மையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று என்று பாராட்டப்படும் இன்ப தமிழ் மொழிக்கு, செம்மொழி தகுதி, மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, சோனியா காந்தி ஆகியோரது முயற்சியால் 2004-ல் வழங்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், மைசூரு நகரில் இயங்கி வந்த செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தையும் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வைத்த கருணாநிதி, 2007-ல், அவருடைய அரசில் அந்த நிறுவனத்துக்கு இடம் வழங்கி அதை சீரமைத்து கொடுத்தார். இந்த இடத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். 2008-ம் ஆண்டு நடந்த இந்த நிறுவன அலுவலகத்திறப்பு விழாவில், கருணாநிதி தன் சொந்த பணத்தில் ஒரு கோடி ரூபாய் வழங்கி, அதற்காக 'கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' நிறுவுவதற்கும் வழிவகுத்தார். இந்த தொகையில் இருந்து கிடைக்கும் வட்டியில், ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த ஒரு தமிழறிஞருக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகையும், விருதும் வழங்க வேண்டும் என்பது அவரது நோக்கமாகும்.

முதல் விருது 2010-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், பின்லாந்து நாட்டை சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு வழங்கப்பட்டது. 2011 முதல் 2019-ம் ஆண்டுவரை அ.தி.மு.க. ஆட்சியில் இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. இப்போது தி.மு.க. ஆட்சியில், கடந்த ஜனவரி மாதத்தில், அந்த ஆண்டுகளுக்குரிய விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த திங்கட்கிழமை நடந்த விழாவில், 2020-ம் ஆண்டுக்கான விருதை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ம.ராசேந்திரனுக்கும், 2021-ம் ஆண்டுக்கான விருது பேராசிரியர் க.நெடுஞ்செழியனுக்கும், 2022-ம் ஆண்டுக்கான விருது பிரான்சு நாட்டின் அறிஞர் ழான் லூயிக் செவ்வியாருக்கும் வழங்கப்பட்டது. இந்த விழாவில், விருதுகளை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, 5 தெற்காசிய பல்கலைக்கழகங்களில், அதாவது "ரீயூனியன் தீவுகளில் இருக்கும் டி லா ரீயூனியன் பல்கலைக் கழகம், இந்தோனேசியா நாட்டில் இருக்கும் சுமத்ரா உத்தாரா பல்கலைக்கழகம், கம்போடியாவில் இருக்கும் கெமர் மொழிகள் ஆய்வு மையம், வியட்நாம் மொழிகள் மற்றும் பன்னாட்டு ஆய்வியல் பல்கலைக்கழகம், தாய்லாந்து சுலோலோங்கோர்ன் பல்கலைக்கழகம்" ஆகிய பல்கலைக்கழகங்களில் செவ்வியல் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்படும் என்ற தமிழ் நெஞ்சங்களுக்கு பூரிப்பு ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டார். தற்போது அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு, ஹூஸ்டன் ஆகிய பல்கலைக்கழகங்களிலும், கனடா நாட்டில் டொரொண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கைகள் இருக்கின்றன.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைப்பதன் மூலம், அங்கு ஒரு தமிழ் வகுப்பு அறை அமைக்கப்பட்டு, ஒரு தமிழ் பேராசிரியர் நியமிக்கப்படுவார். அவர் சங்க இலக்கியம் முதல் திராவிட இலக்கியம் வரை மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பார். அந்த நாட்டிலுள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள், பணிக்கு சென்ற தமிழர்களின் பிள்ளைகள் மட்டுமல்லாமல், அந்த நாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களில், தமிழ் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் தமிழ் கற்றுக்கொடுக்கப்படும் என்கிறார், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் ந.அருள். முதல்-அமைச்சர் பேசும்போது, இது முதல் கட்டம் என்று சொல்லியதில் இருந்து, இன்னும் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் அடுத்து வரப்போகும் காலங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும் என்று தெரிகிறது. தமிழ் மொழியை பரப்ப, அதை மேன்மைப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த முயற்சி நிச்சயமாக தமிழ்மொழிக்கு புகழ் சேர்க்கும். பாரதியாரின் கனவு நனவாகிறது.


Next Story