அன்று ரிக்கார்டோ சொன்னார்; இன்று பிரதமர் கூறுகிறார்!


அன்று ரிக்கார்டோ சொன்னார்; இன்று பிரதமர் கூறுகிறார்!
x

பொதுவாக எந்த தேர்தல் என்றாலும் சரி, அரசியல் கட்சிகள் பல வாக்குறுதிகளை அளித்து தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம்.

பொதுவாக எந்த தேர்தல் என்றாலும் சரி, அரசியல் கட்சிகள் பல வாக்குறுதிகளை அளித்து தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். சமீப காலங்களாக, அனைத்து அரசியல் கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு இலவசங்கள், மானியங்களை அறிவிக்கின்றன. தேர்தலில் வெற்றிபெற்ற கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், எதிர்க்கட்சிகள், "நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?" என்று கேட்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

இதுபோலத்தான் நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் பல வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த நாளிலேயே 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துவிட்டு, அமைச்சரவை கூட்டத்திலும் ஒப்புதல் அளித்துவிட்டது. அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம், ஒவ்வொரு குடும்ப இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூ.2 ஆயிரம், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 என்று அறிவித்திருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.65 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும். இந்த ரூ.65 ஆயிரம் கோடி செலவை ஈடுகட்ட பெட்ரோல் விலை, தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணம், சொத்து வரி, வழிகாட்டி மதிப்பு எல்லாமே உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோல, இமாசலபிரதேசம், பஞ்சாப் அரசாங்கங்களும் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம், இலவச மின்சாரம் போன்ற பல வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்க கஜானாவில் இருந்து செலவழித்துக் கொண்டிருக்கின்றன. இப்படி தமிழ்நாடு உள்பட பல அரசுகள் இலவசங்களை அரசு நிதியில் இருந்து வழங்கிக்கொண்டு இருக்கின்றன. இத்தகைய செலவுகளை சரிக்கட்ட அரசு என்ன செய்யமுடியும்? என்பதற்கு, 18-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் வாழ்ந்த இங்கிலாந்து நாட்டு பொருளாதார நிபுணர் டேவிட் ரிக்கார்டோ, "இதற்கு 2 வழிகள்தான் இருக்கிறது. ஒன்று கடன் வாங்கவேண்டும் அல்லது வரி போடவேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

இப்போது அரசாங்கம் கடன் வாங்கினால், அந்தக் கடனை திருப்பி கட்டுவதற்கும், வட்டி கட்டுவதற்கும் நிறைய வரியை எதிர்காலத்தில் போடவேண்டியது இருக்கும். கடன் வாங்கவில்லையென்றால், அரசு வரியை உயர்த்தும். மக்கள் இப்போது கட்டும் வரியைவிட கூடுதலாக கட்ட வேண்டியது இருக்கும். ஆக இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், தமிழக அரசின் கடன் அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவாகவே இருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு டேவிட் ரிக்கார்டோ சொன்ன அதே கருத்து பொருள்படும்படி, பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் நடந்த நிதிஆயோக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். "மாநில அரசுகள் நிதி ஒழுங்கில் மிக கவனமாக இருக்கவேண்டும். சீரான நிதிநிலை மிகவும் அவசியமானது. ஏனெனில், எதிர்கால சந்ததிக்கு அதிக சுமையை ஏற்றிவைத்துவிடக்கூடாது. மாநில அரசுகள் செய்யும் எல்லாவற்றிலும், எல்லா திட்டமிடுதலிலும், அறிவிப்புகளை வெளியிடும்போதும் இதை கவனத்தில் கொள்ளவேண்டும். 2047-ல் வளர்ந்த இந்தியாவாக மாற்றவேண்டும் என்பதையே குறிக்கோளாகக்கொண்டு, மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் ஒரே அணியாக நின்று செயல்படவேண்டும். எதிர்கால சந்ததிக்கு நிதிச்சுமையை மாநில அரசுகள் ஏற்படுத்திவிடக்கூடாது. அதாவது வரிச்சுமையை ஏற்றிவிடக்கூடாது" என்பதே அவர் பேச்சின் கருப்பொருளாக இருந்தது. பிரதமரின் இந்த பேச்சு அர்த்தமுள்ளதாகவும், அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசாங்கமும் சிந்திக்க வேண்டியதாகவும் இருந்தது.

1 More update

Next Story