மக்களின் முதல் எதிரி விலைவாசி உயர்வு


மக்களின் முதல் எதிரி விலைவாசி உயர்வு
x

1974-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 1977-ம் ஆண்டு ஜனவரி வரை அமெரிக்க நாட்டின் 38-வது ஜனாதிபதியாகவும், அதற்கு முன்பு துணை ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர் ஜெரால்டு போர்டு.

1974-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 1977-ம் ஆண்டு ஜனவரி வரை அமெரிக்க நாட்டின் 38-வது ஜனாதிபதியாகவும், அதற்கு முன்பு துணை ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர் ஜெரால்டு போர்டு. இவர் சொன்ன 4 வார்த்தைகளை இன்றும் உலகம் வழிகாட்டும் வார்த்தைகளாக கருதுகிறது. அந்த காலக்கட்டங்களில், பணவீக்கம், அதாவது விலைவாசி உயர்வு உலகில் பல்வேறு நாடுகளில் பெரும் பிரச்சினையாக இருந்தது. அந்த நேரத்தில் அவர் சொன்னது, "பணவீக்கம்தான் மக்களின் முதல் எதிரி" என்பதாகும்.

பொருளாதாரம் என்பது வளமான வாழ்க்கை பற்றிய அறிவியல்தான். ஒரு நாட்டில் பொருளாதார மேம்பாடு இருக்க வேண்டுமென்றால், வேலைவாய்ப்பு, வருமானம், வாழ்க்கைத்தரம், எல்லாவற்றுக்கும் மேலாக குறைவான விலைவாசி இருந்தால்தான், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். எனவே, அன்றாட வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டுமென்றால், விலைவாசி கட்டுக்குள் இருக்கவேண்டும். கொரோனா காலத்தில் பொருட்களின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற காரணத்தால், தடுமாறிக்கொண்டிருந்த மக்களின் அன்றாட வாழ்க்கை, மீண்டும் எழுந்து நிற்கத்தொடங்கும் நேரத்தில், விலைவாசி உயர்வு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயர்ந்த காரணத்தால்தான் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது வசூலிக்கும் 'ரெப்போ ரேட்' வட்டி விகிதத்தை கூட்டியிருக்கிறது. இப்போது மீண்டும் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு சில்லரை பொருட்களின் விலைவாசி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், இன்னும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திவிடுமோ?, வீட்டுக்கடன், வாகனக்கடன் மாதத்தவணை அதிகரித்துவிடுமோ? என்ற கவலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பொருட்கள் என்று 299 பொருட்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களின் விலை உயர்கிறதா?, குறைகிறதா? என்பதை கணக்கிட்டுத்தான் நுகர்வோர் விலை குறியீடு எண் கணக்கிடப்படுகிறது. இந்தியா முழுவதுமுள்ள 310 முக்கிய நகரங்கள் மற்றும் நடுத்தரமான ஊர்களிலுள்ள 1,181 கிராமச் சந்தைகள், 1,114 நகர்ப்புற சந்தைகளிலிருந்து விலைவாசி விவரங்களை பெற்று நுகர்வோர் விலை குறியீடு எண் கணக்கிடப்படுகிறது.

இந்த விலைவாசி மாற்றத்தை 4 சதவீதம் வரை வைத்திருப்பது ரிசர்வ் வங்கியின் கடமை என்றாலும், 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை மாறுபாடு இருக்கலாம். இந்த நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில்தான் மொத்த விற்பனை குறியீட்டு எண், சில்லரை விற்பனை குறியீட்டு எண் கணக்கிடப்படுகிறது. தற்போது, இந்த இரண்டுமே பல ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. என்றாலும், உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வு தமிழ்நாடு மற்றும் கேரளாவில்தான் ஓரளவு குறைந்திருக்கிறது. நாடு முழுவதும் ஏப்ரலில் பணவீக்கம், அதாவது விலைவாசி உயர்வு 7.2 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 5.37 சதவீதம்தான் உயர்ந்திருக்கிறது. அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, கடலை எண்ணெய் விலை தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பதன் காரணமாக விலைவாசி அதிகரித்திருக்கிறது. ஆனால், போக்குவரத்து செலவை பொறுத்தமட்டில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சாதாரண கட்டண பஸ்களில், பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தபிறகு, அதில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், பெரும்பாலான குடும்பங்களில் போக்குவரத்து செலவு குறைந்துவிட்டது. என்றபோதிலும், இடையில் சில நாட்கள் காய்கறிகளின் விலை, குறிப்பாக தக்காளி விலை மிக அபரிமிதமாக உயர்ந்தது. இதற்கு காரணம், கடந்த ஆண்டு விலை மிகவும் குறைந்துபோன நிலையில், இந்த ஆண்டு பல விவசாயிகள் தக்காளி சாகுபடியை குறைத்துக்கொண்டனர். எனவே, விவசாயிகளுக்கு எப்போதும் கட்டுப்படியான விலை கிடைக்கும் நிலையையும், மக்கள் தேவைக்கு ஏற்ப சாகுபடி நடக்கிறதா? என்று ஆய்வுசெய்து, அதற்கேற்ற வகையில் ஊக்கமளிக்கும் நிலையையும் ஏற்படுத்தவேண்டும் என்பதே இப்போதைய கோரிக்கையாக இருக்கிறது.


Next Story