தலைதூக்கும் "ரவுடி மாமூல்'' கலாசாரம்!


தலைதூக்கும் ரவுடி மாமூல் கலாசாரம்!
x

தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பதால்தான், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தொழில் முதலீடுகள் வந்து குவிகின்றன. ஆனால், கடைவைத்து இருப்பவர்களுக்கும், தொழில் நடத்துபவர்களுக்கும் உள்ளூர் ரவுடிகளால் ஏற்படும் பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அரசு துறைகளில் உள்ள சில ஊழியர்கள் மாமூல் வசூலிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்போது புதிதாக ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டும் கலாசாரம் சில இடங்களில் தலைதூக்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவர் சென்னையை அடுத்த வண்டலூர்-ஓட்டேரி மெயின் ரோட்டில் ஒரு மருந்துக்கடை வைத்திருந்தார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அவர் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, 4 பேர் அவரை பின்தொடர்ந்து சென்று வழிமறித்து அரிவாளால் வெட்டி துடிக்க.. துடிக்க.. கொலை செய்தனர். போலீசார் உடனடியாக நடத்திய விசாரணையில், இது 2 வாரங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியின் கொடூர செயல் என்பது தெரியவந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரவுடி மருந்துக்கடை அதிபர் வினோத்குமாரை வாரந்தோறும் மாமூல் கொடுக்கும்படி அச்சுறுத்தி வந்ததாகவும், அவர் செல்போனில் விடுத்த மிரட்டல்களை மருந்துக்கடை அதிபர் பதிவு செய்து போலீசில் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி குண்டர் சட்டத்தில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விடுதலையானார். அவருடைய கூட்டாளிகள் போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கும்படி வற்புறுத்தியும் மருந்துக்கடை அதிபர் மறுக்கவே, இந்த கொடூர கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நெய்வேலியில் பிரியாணி கடை நடத்தி வந்த கண்ணன் என்பவர், 'ஓசி' பிரியாணி கேட்டு தொல்லை கொடுத்த ரவுடிகள் குறித்து போலீசில் புகார் செய்ததால், கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சென்னையை சுற்றிலும் மட்டுமல்லாமல், பரவலாக தொழிற்சாலைகளில் 'ஸ்கிராப்' எடுப்பவர்களிடம் ரவுடிகள் மாமூல் கேட்பதும், அவர்கள் சொல்லும் வியாபாரிகளுக்கு மட்டுமே இந்த ஒப்பந்தங்கள் கொடுக்கப்படவேண்டும் என்று, தொழிற்சாலை நிர்வாகத்தையும், ஒப்பந்தம் எடுக்க டெண்டர் போட்டவர்களையும் மிரட்டும் சம்பவங்களும் இப்போது அதிகமாக நடந்துவருகிறது. மாமூல் தருபவர்கள் மட்டுமே டெண்டரில் பங்கு பெற வேண்டும் என்றும் நிர்பந்திக்கின்றனர். இதை போலீசார் கண்காணித்து ரவுடிகளின் அட்டகாசத்தை நசுக்கவேண்டும் என்பது வியாபாரிகளின் கோரிக்கையாக இருக்கிறது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே மாமூலை வரி கட்டுவதுபோல வந்து கொடுக்கவேண்டும் என்று மிரட்டும் இதுபோன்ற செயலுக்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

பல இடங்களில் வியாபாரிகள் இந்த ரவுடிகளுக்கு பயந்து போலீசில் புகார் கொடுக்கவும் தயங்குகிறார்கள். புகார் கொடுத்தால், வினோத்குமாருக்கு நேர்ந்த கதி நமக்கும் ஏற்பட்டுவிடுமோ? என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது. எனவே, வியாபாரிகள் புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் நினைக்காமல், அவர்களே இதுபோன்ற ரவுடி மாமூலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த ரவுடி மாமூல் கலாசாரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்.


Next Story