சேது சமுத்திர திட்டம் உயிர்பெற வேண்டும்


சேது சமுத்திர திட்டம் உயிர்பெற வேண்டும்
x

சேது சமுத்திர திட்டம், தமிழர்களின் தலைமுறை தாண்டிய கனவு திட்டமாகும்.

சேது சமுத்திர திட்டம், தமிழர்களின் தலைமுறை தாண்டிய கனவு திட்டமாகும். 1860-ம் ஆண்டு கமாண்டர் ஏ.டி.டெய்லர் திட்டம் என்ற பெயரில் உருவெடுத்த திட்டம் இது. 1930-களில் இந்த கோரிக்கை சென்னை மாகாண நீதிகட்சி அரசுக்கு விடுக்கப்பட்டது. 1942-ல் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வெளியிட்ட 'தமிழ்பேரரசு' என்ற நூலில், "கோடிக்கணக்கில் வருமானம் தேடிக்கொடுக்கும் வாய்ப்பை உண்டுபண்ணக்கூடிய தனி வசதியும் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதுதான் தமிழன் கால்வாய்.......சேது சமுத்திரம் என்ற கடல் தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையே இருக்கிறது. கடலின் இரு பக்கத்திலும் வசிப்பவர்கள் தமிழ்மக்களே.... இந்த கடலின் ஆழம் மிகவும் குறைவு. கொஞ்சம் ஆழப்படுத்தி கடலுக்குள்ளேயே சிறு கால்வாயை வெட்டினால் கப்பல் போவதற்கு வசதிகள் ஏற்படும்" என்று குறிப்பிட்ட அவர், இந்த கோரிக்கையை வலியுறுத்த கருத்துப்படமும் வெளியிட்டார். அவர் மறையும் வரை சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் இந்த திட்டத்தை எப்படியும் நிறைவேற்றியேயாக வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தினர். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் முயற்சிகளை மேற்கொண்டார். 2001-ல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசாங்கத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சேது சமுத்திர திட்டத்தின் தொடக்க விழா மதுரையில் 2005-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந்தேதி நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த இந்த விழாவில், கருணாநிதி, சோனியாகாந்தி கலந்துகொண்டனர். இந்த திட்டத்துக்கு அப்போது கப்பல், சாலை போக்குவரத்து துறை மந்திரியாக இருந்த டி.ஆர்.பாலு முழு வடிவம் தந்து, இதை நிறைவேற்ற மிக தீவிரமாக பணியாற்றினார். ரூ.2400 கோடி மதிப்பிலான இந்த திட்டப் பணிகளில் ரூ.824 கோடி செலவழிக்கப்பட்ட நிலையில், திடீரென்று "இது ராமர் பாலம் இருந்த இடம், ராமர் பாலத்தை இடிக்கலாமா?" என்று சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா உள்பட சிலர் வழக்கு தொடர்ந்ததால், இந்த திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்ற முடியவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரு கேள்விக்கு பதிலளித்த அறிவியல் தொழில்நுட்பத் துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங், "செயற்கைகோள் ஆய்வில் ராமர் பாலம் இருந்ததாக துல்லியமாக கூற முடியவில்லை" என்று தெளிவாக கூறியுள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், "தடைகளை உடைத்து சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற அரசு பாடுபடும்" என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், டி.ஆர்.பாலு எழுதிய நூலை வெளியிட்டு பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "அண்ணா, கலைஞரின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டே ஆகவேண்டும். இதை டி.ஆர்.பாலு கையில் எடுக்கவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் சாதகமான தீர்ப்பை பெறுவதற்கு மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில் அளித்த பதிலே பெரிய ஆயுதமாகும். மேலும் டி.ஆர்.பாலு சம்பந்தப்பட்ட துறை மந்திரியாக இருந்தவர் என்ற முறையில், இதை மிக ஆழமாக தெரிந்தவர். எனவே அவரும், திட்டத்தை விரும்பும் அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளைத் தட்டினால், நியாயம் கிடைக்கும். சேது சமுத்திர திட்டம் வரும். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே வளம்பெறும்.


Next Story