சும்மா கிடைக்கவில்லை இந்த செஸ் ஒலிம்பியாட்!


சும்மா கிடைக்கவில்லை இந்த செஸ் ஒலிம்பியாட்!
x

சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மிக கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மிக கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. ஒரு ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு இணையான ஏற்பாடுகளை மிக குறுகிய காலத்தில் செய்து முடித்த தமிழக அரசையும், விளையாட்டு மேம்பாட்டுத் துறையையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்தியாவில் இதுவரை செஸ் ஒலிம்பியாட் நடந்ததில்லை என்பது மட்டுமல்லாமல், ஆசியாவிலேயே 30 ஆண்டுகளுக்கு முன்புதான் நடந்தது. தொடக்க விழாவில் வெள்ளை வேட்டி-சட்டை-துண்டு அணிந்து பிரதமர் நரேந்திரமோடியும், மங்களகரமாக பட்டு வேட்டி-சட்டை-துண்டு அணிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் வந்திருந்தனர். பாகிஸ்தான் தவிர, 186 நாடுகள் தொடக்கத்தில் தங்கள் நாட்டு கொடியுடன் அணிவகுத்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

"சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்" என்பார்கள். எண்ணற்ற தியாகிகளின் உயிர் தியாகத்தாலும், போராட்ட தழும்புகளாலும், சிறைவாச சித்ரவதையாலும்தான் கிடைத்தது. அதுபோல, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தபோது மின்னல் வேகத்தில், அந்த வாய்ப்பை கச்சிதமாக பிடித்துக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதை தமிழ்நாட்டில் நடத்த கொண்டுவந்துவிட்டார்.

முதல் செஸ் ஒலிம்பியாட் 1927-ம் ஆண்டு லண்டன் மாநகரில் நடந்தது. 1956-ம் ஆண்டில்தான் முதன் முதலில் இந்திய வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொண்டார்கள். இந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷியாவில்தான் நடந்திருக்கவேண்டும். ஆனால், உக்ரைனுடனான போர் காரணமாக அந்த வாய்ப்பை ரஷியா இழந்தது. அதற்கு பதிலாக போலந்தும், உஸ்பெகிஸ்தானும், "நாங்கள் நடத்துகிறோம்" என்று முன்வந்தன. ஆனால், இந்திய செஸ் சம்மேளன தலைவர் பரத்சிங் சவுகான், இந்தியாவில் அந்த போட்டியை நடத்துவதற்கான வகையில் காய்களை நகர்த்தினார். இந்தியாவில் எந்த மாநிலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தலாம் என்று பரிசீலித்தபோது, அவர் மனதில் தோன்றியது தமிழ்நாடுதான்.

தமிழக அரசை அவர் தொடர்பு கொண்டபோது, ஒரு சில மணி நேரங்களில் முடிவு எடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்று மாலையே சென்னைக்கு வரும்படி அகில இந்திய செஸ் சம்மேளன தலைவருக்கு அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை உள்பட ஒட்டுமொத்த அரசு எந்திரமும் முழு வேகத்தில் இயங்கியது. மாமல்லபுரத்தில் நடத்தலாம் என்று முடிவு எடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்தநாளே அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர் பரத்சிங் சவுகானை வரவேற்று சந்தித்ததோடு மட்டுமல்லாமல், அப்போதே தமிழ்நாட்டில் நடத்த சம்மதம் தெரிவித்தார். அன்று மாலை 4 மணிக்கே அரசு சார்பில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதம் கொடுக்கப்பட்டது.

மார்ச் மாத தொடக்கத்தில் சர்வதேச செஸ் விளையாட்டு சம்மேளன நிர்வாகிகள், அழகிய கடற்கரை, தங்கும் விடுதிகள் கொண்ட மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு நடத்தப்போகிறது என்பதை நேரில் பார்த்துவிட்டு, உடனடியாக மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்தனர். 4 மாதங்கள்தான் கால அவகாசம் இருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்காமல், உடனடியாக ரூ.102 கோடியை இந்த போட்டிகள் நடத்த ஒதுக்கினார். பல்வேறு துறைகளை சேர்ந்த 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட அமைப்பு குழு அமைக்கப்பட்டது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. அடிக்கடி ஆய்வு கூட்டங்களை நடத்தியது மட்டுமல்லாமல், போட்டி நடக்கும் இடங்கள் மற்றும் வசதிகளை நேரில் பார்வையிட்டார். எல்லோருடைய மனதையும் விட்டு ஒருபோதும் அகலாத, வேட்டி சட்டையுடன் கூடிய குதிரை சின்னமான 'தம்பி', ஏ.ஆர்.ரகுமான் இசையில் செஸ் கீதம் ஆகியவை உருவாக்கப்பட்டது.

மொத்தத்தில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் அனைத்து நாட்டு வீரர்களையும் கவர்ந்தது. எல்லாமே சிறப்பாக இருக்கிறது என்று வெகுவாக பாராட்டுகிறார்கள். சென்னை செஸ் ஒலிம்பியாட் சரித்திரத்தில் என்றென்றும் இடம் பெற்றிருக்கும். இந்த வெற்றிக்கு பின்னால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசின் அயராத உழைப்பு இருக்கிறது.


Next Story