நகர்ப்புற நல வாழ்வு மையங்கள்!


நகர்ப்புற நல வாழ்வு மையங்கள்!
x

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், எந்த செயலையும் உற்சாகமாக செய்ய முடியும்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், எந்த செயலையும் உற்சாகமாக செய்ய முடியும். அதனால்தான், "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதை முன்னோர்கள் மட்டுமல்லாமல், இப்போதும் பெரியவர்கள் அறிவுரையாக சொல்லி வருகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பல கூட்டங்களில் பேசும்போது கல்வியையும், மருத்துவத்தையும் தனது அரசு இரு கண்களாக பாவித்து அதற்கேற்ற திட்டங்களை தீட்டிவருகிறது என்று கூறுவது வழக்கம். மருத்துவ வசதிகள் அனைவருக்கும் தங்கு தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தாலுகா அளவில் மருத்துவமனைகளும், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளும் மக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சைகளை வழங்கி மருந்து-மாத்திரைகளையும் வழங்கி வருகின்றன. நகர்ப்புறங்களில் பெரிய மருத்துவமனைகள் இருந்தாலும், மக்களுக்கு வீட்டுக்கு அருகிலேயே மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு நிறைவடைந்த நாளான கடந்த ஆண்டு மே 7-ந் தேதியன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப்போல, நகர்ப்புறங்களில் அரசு பொது மருத்துவமனைகளை நோக்கி மக்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையை மாற்றும் வகையில், ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கிடும் வகையில், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், மற்றும் 63 நகராட்சி பகுதிகளில் 708 நகர்ப்புற மையங்கள் புதிதாக அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.

இப்போது முதல் கட்டமாக சென்னை உள்பட மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 500 நகர்ப்புற நல வாழ்வு மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். ஒவ்வொரு நகர்ப்புற நல வாழ்வு மையங்களிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு தூய்மை பணியாளர் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இதை தொடங்கியதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு கிடைத்துள்ளன. இந்த நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் மகப்பேறு நல சேவைகள், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை நல சேவைகள், வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள், குடும்ப கட்டுப்பாடு சேவைகள், தொற்று நோய்களுக்கான சேவைகள், தொற்றாநோய்களுக்கான சேவைகள், கண், காது, மூக்கு, பல், வாய் மற்றும் தொண்டை நோய்களுக்கான சேவைகள், முதியோர் மற்றும் நோய் ஆதரவு சேவைகள், அவசர மருத்துவ சேவைகள், மனநல சேவைகள் மற்றும் யோகா போன்ற பல்வேறு நலவாழ்வு சேவைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் 172 வகை முக்கியமான மருந்துகளும், 64 வகை அவசியமான ஆய்வக சேவைகளும் ஆண்டு முழுவதும் இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் தங்கு தடையின்றி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்புக்குரியது. இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை - எளிய, நடுத்தர மக்களுக்கு அவசர சேவைகள் உள்பட அனைத்து சேவைகளும் வீட்டுக்கு அருகிலேயே குறைந்த நேரத்தில் கிடைக்கும் என்பதால், இந்த மருத்துவ திட்டம் ஒரு மகத்தான திட்டம். மக்களுக்கு பயனளிக்கும் திட்டம். மக்கள் வரவேற்கும் திட்டம்.


Next Story