அடுத்த பூஸ்டர் டோஸ் எப்போது?


அடுத்த பூஸ்டர் டோஸ் எப்போது?
x

தமிழ்நாட்டில் 3 அலைகளாக கொரோனாவின் தாக்குதல் ஏற்பட்டது. நல்ல வேளையாக தடுப்பூசி என்ற கேடயம் வந்தது.

அமைதியான நதியினில் செல்லும் ஓடம்போல, இந்தியாவின் பொருளாதார பயணம் சுகமாக சென்று கொண்டிருந்தது. அனைத்து துறை வளர்ச்சியிலும் வேகமாக நடை போட்டுக்கொண்டிருந்தது. வேகமாக செல்லும் ஒரு வாகனத்துக்கு முட்டுக்கட்டை போட்டதுபோல, கொடிய கரங்களைக் கொண்ட கொரோனா தன் கால் தடத்தை இந்தியாவில் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், தமிழ்நாட்டில் மார்ச் மாதத்திலும் பதித்தது. தொடக்கத்தில் ஓரிருவர் என்று தொடங்கி, சில தினங்களில் காட்டுத்தீ போல வேகமாக பரவியது. கொத்து கொத்தாய் மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், மக்களின் வாழ்வாதாரமே நிலை குலைந்து போனது. வருமானம் குறைந்தது. வேலையிழப்பு ஏற்பட்டது. உற்பத்தி வீழ்ச்சி, கதவடைப்பு, தொழில் நிறுவனங்களில் ஆள்குறைப்பு என்று ஏற்பட்ட சரிவு சமுதாயத்தை சீரழித்தது.

தமிழ்நாட்டில் 3 அலைகளாக கொரோனாவின் தாக்குதல் ஏற்பட்டது. நல்ல வேளையாக தடுப்பூசி என்ற கேடயம் வந்தது. மாநிலத்தில் 16-1-2021 முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. 38 ஆயிரத்து 38 பேர் கொரோனாவால் இன்னுயிரை இழந்துள்ளனர். முதல் டோஸ், 2-வது டோஸ், அதற்கு அடுத்து பூஸ்டர் டோஸ் என்று இதுவரையில் 3 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் போடுவதோடு, சிறப்பு முகாம்கள், மெகா முகாம்களை நடத்தி, அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசின் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தீவிரமாக ஆற்றிவருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 50 ஆயிரம் இடங்களில் 36-வது சிறப்பு மெகா முகாம் நடந்தது. இதில் 12 லட்சத்து 62 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுவரை நடந்த மெகா தடுப்பூசி முகாம்களில் மட்டும், 3 டோஸ்களையும் சேர்த்து 5 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள் என்ற வகையில், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையின் முனைப்பு பாராட்டுக்குரியது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களைப் பொறுத்தவரை, இதுவரையில் 96.49 சதவீதம் பேர் முதல் டோசும், 91.09 சதவீதம் பேர் 2-வது டோசும் போட்டிருக்கிறார்கள். ஆனால் பூஸ்டர் டோசை 18.92 சதவீதம் பேர் மட்டுமே போட்டிருக்கிறார்கள் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் கூறினார்.

இப்படி பூஸ்டர் டோஸ் போடும் ஆர்வம் மக்களிடையே நத்தை வேகத்தில் இருப்பதற்கு காரணம், கொரோனா பற்றிய ஒரு பயம் மக்களிடையே இல்லாமல் போனதுதான். இனி நமக்கு எப்படி வரும்? என்று நினைக்கிறார்கள். புகழ்பெற்ற தொற்று நோய் நிபுணர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான், "கொரோனா இனி எந்த காலத்திலும் சுற்றி சுற்றித்தான் இருந்து கொண்டு இருக்கும். மக்கள் இதை புரிந்துகொண்டு முககவசம் அணிதல், பூஸ்டர் டோஸ் போடுதலில் கவனமாக இருக்க வேண்டும். இணை நோய் உள்ளவர்களுக்கு குறைந்த பட்சம் 2 பூஸ்டர் டோஸ் வேண்டும். அதிலும் காசநோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் அவசியம் என்று கூறியிருக்கிறார்.

எனவே, பூஸ்டர் டோஸ் போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். அதற்குரிய விழிப்புணர்வை இன்னும் அதிகமாக ஏற்படுத்த வேண்டும். பூஸ்டர் டோஸ் போட்டு 6 மாதங்கள் ஆனவர்களுக்கு அடுத்த பூஸ்டர் டோஸ் போடும் ஏற்பாடுகளை மத்திய அரசாங்கம் தொடங்க வேண்டும். பல நாடுகளில் 2-வது பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கிவிட்டன. இஸ்ரேலில் கடந்த ஜனவரி மாதம் முதல் 2-வது பூஸ்டர் டோஸ் போடும் வேலை நடந்து வருகிறது. எனவே மத்திய அரசாங்கமும் இதை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.


Next Story