இந்தியா பங்கு பெறாத உலக கால்பந்து போட்டி


இந்தியா பங்கு பெறாத உலக கால்பந்து போட்டி
x

உலகம் முழுவதிலும் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்றால், அது கால்பந்துதான்.

உலகம் முழுவதிலும் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்றால், அது கால்பந்துதான். ஒலிம்பிக் போட்டிகளில் கால்பந்து இருந்தாலும், சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தும் உலக கால்பந்து போட்டிதான் எல்லோரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. முதலில் 1872-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள கிளாஸ்கோவில் ஸ்காட்லாந்து-இங்கிலாந்து இடையே முதல் சர்வதேச கால்பந்து போட்டி நடந்தது. அதனைத்தொடர்ந்து எல்லா நாடுகளிலும் கால்பந்து பிரபலமானது. 1900, 1904-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் காட்சிப்போட்டியாக நடத்தப்பட்ட கால்பந்து விளையாட்டு, 1908-ல் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அதிகாரப்பூர்வமான போட்டியாக அறிவிக்கப்பட்டது.

முதல் உலகக்கோப்பை போட்டி 1930-ல் உருகுவே நாட்டில் நடந்தது. இந்த போட்டியில் 13 நாடுகள் பங்கேற்றன. அர்ஜென்டினாவை, உருகுவே வீழ்த்தி, முதல் உலக சாம்பியனானது. தொடர்ந்து போட்டிகள் நடந்த நிலையில், 2-ம் உலகப்போர் நடந்த நேரத்தில், அதாவது, 1942, 1946-ல் போட்டிகள் ரத்துசெய்யப்பட்டன. கடைசியாக 2018-ம் ஆண்டு நடந்த போட்டியில், பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது. உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும், 'பிபா' உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு கத்தாரில் வரும் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

141 கோடி மக்கள்தொகையை கொண்ட இந்தியா, இதுவரை உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கவும் இல்லை, நடத்தவும் இல்லை என்பது மிகப்பெரிய மனக்குறையாகும். இதுமட்டுமல்ல, உலக தரவரிசையில் 106-வது இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. இந்த போட்டி நடப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்கிவிடும். ஆப்பிரிக்கா, ஆசியா, வடக்கு, மத்திய, தென்அமெரிக்கா, கரீபியன், ஓசேனியா, ஐரோப்பா என 6 கண்டங்களில் உள்ள நாடுகளின் அளவில் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடத்தப்பட்டு, அணிகள் தேர்ந்தெடுக்கப்படும். இந்தியாவை பொறுத்தமட்டில், ஆசிய மண்டல தகுதிச்சுற்றில் விளையாடுவதும், தொடக்கச்சுற்றுகளிலேயே வெளியேறுவதும் வாடிக்கையாகிவிட்டது.

1950-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், பல அணிகள் விலகியதன் காரணமாக, இந்தியா தகுதிபெற்றது. ஆனால், பிரேசில் பயணத்துக்கு அதிக செலவாகும் என்று கூறி அகில இந்திய கால்பந்து சம்மேளனம் இந்திய அணியை அனுப்பவில்லை. தகுதிச்சுற்றில் தகுதிபெறாவிட்டாலும், போட்டி எந்த நாட்டில் நடக்கிறதோ?, அந்த நாட்டு அணி உலக கோப்பைக்கான கால்பந்து போட்டியில் கலந்துகொள்ள முடியும். இதுவரை இந்தியாவில் இந்த போட்டியை நடத்தாததால், அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. 17 வயதுக்குட்பட்ட 7-வது ஜூனியர் பெண்கள் உலக கால்பந்து போட்டியை இந்தியா முதல்முறையாக கடந்த மாதம் நடத்தியது. போட்டியை நடத்திய நாடு என்ற வகையில், இந்தியாவுக்கு முதல் முறையாக இந்த போட்டியில் விளையாடும் அதிர்ஷ்டம் கிடைத்தது. ஆனால் முதல்சுற்றிலேயே தோல்வியை தழுவியது.

இந்த ஆண்டு 'பிபா' உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், சிறிய நாடுகள் உள்பட மொத்தம் 32 அணிகள் பங்கேற்க தகுதிபெற்றுள்ள சூழ்நிலையில், இந்தியாவுக்கு அதில் வாய்ப்பு கிடைக்காதது வருத்தமே. இத்தாலிய டிசைனர் சில்வியோ கசனிகா வடிவமைத்த உலக கோப்பையை, இந்தியா பெறவேண்டும் என்றால், அடுத்த 4 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க, இந்திய வீரர்களை தகுதிபடைத்தவர்களாக ஆக்கும் முயற்சியாக, இப்போதே இடைவிடாத தீவிர பயிற்சி அளிக்கவேண்டும் என்பதே கால்பந்து விளையாட்டு ரசிகர்களின் வேண்டுகோளாகும்.


Next Story