செல்வத்தை அள்ளித்தரும் மகாலட்சுமி அம்மன்.. மேட்டு மகாதானபுரம் ஆலய சிறப்புகள்


செல்வத்தை  அள்ளித்தரும் மகாலட்சுமி  அம்மன்.. மேட்டு மகாதானபுரம் ஆலய சிறப்புகள்
x

மகாலட்சுமியின் மகிமையை உணர்ந்த வெள்ளையர்கள், கோவில் அமைய உள்ள இடத்தில் ரெயில் தண்டவாளம் அமைக்கும் முயற்சியை கைவிட்டனர்.

செல்வத்தை அள்ளித்தரும் மகாலட்சுமிக்கு, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள மேட்டு மகாதானபுரத்தில் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக விளங்குகிறது.

இந்த ஆலயம் தொடக்க காலத்தில் சிறிய குடிசையாக இருந்தது. சிறிய கல் வடிவில் இருந்த அம்மன் சிலையை வைத்து பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அம்மனின் சக்தியால் பயன்பெற்றவர்கள், அம்மனின் ஆசியை வேண்டிய பக்தர்கள், ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அம்மனுக்கு ஆலயம் எழுப்ப முயற்சி மேற்கொண்டனர். அப்போது வெள்ளையர்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது ஆலயம் இருந்த பகுதி வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே அந்தப் பகுதியில் ஆலயம் அமைப்பதற்கு ஆங்கிலேய அரசு தடை விதித்தது. தங்களது வாழ்வில் விடியலை ஏற்படுத்தி தரும் அம்மனுக்கு கோவில் கட்ட முடியவில்லையே என்று எண்ணி பக்தர்கள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் ரெயில் பாதை அமைப்பதற்காக பணிகள் தொடங்கப்பட்டன. ரெயில் பாதை பணிக்கு தேவையான தளவாட பொருட்கள் அந்தப் பகுதியில் கொண்டு வந்து குவித்து வைக்கப்பட்டன.

ஒருநாள் அதிகாலை அங்கு ரெயில் பாதை அமைக்க வைத்திருந்த தளவாடபொருட்கள் அனைத்தும், தேங்காய் வடிவில் கல் உருண்டைகளாக மாறிப்போய் இருந்தது. அதைப்பார்த்த அனைவரும் இது அம்மனின் சக்திதான் என்று முடிவு செய்தனர். மேலும் அம்மனை வைத்து வழிபட்ட இடத்தில் ஒரு பள்ளம் தோன்றி இருப்பதையும் பார்த்தனர். இதனையடுத்து அந்தப் பள்ளத்தை பொதுமக்கள் தோண்டி பார்த்தபோது, பள்ளத்திற்குள் மகாலட்சுமி அம்மன் சிலை ஒன்று புதுப்பொலிவுடன் தகதகவென்று மின்னியபடி காட்சியளித்தது. தகவல் அறிந்து அந்த பகுதி மக்கள் அனைவரும் அங்கு திரண்டு வந்தனர். அம்மன் சிலையை பார்த்து பயபக்தியுடன் வணங்கினர்.

இந்த நிலையில் ரெயில் பாதை அமைக்க இருந்த இடத்தில் அம்மன் சிலை கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆங்கிலேயர்கள், அம்மனின் மகிமையை கண்டு மிரண்டு போய் அந்த இடத்தில் ரெயில் தண்டவாளம் அமைக்கும் முயற்சியை கைவிட்டனர். அந்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளி ரெயில் தண்டவாளம் அமைத்து கொள்கிறோம். ரெயில் செல்லும் சத்தம் கூட இந்த அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்காது என்று கூறி சென்றுவிட்டனர்.

அதன் பிறகு பக்தர்களின் எண்ணப்படி, அந்த இடத்தில் அம்மனுக்கு அழகிய ஆலயம் கட்டப்பட்டது. கோவிலை சுற்றி வர மூன்று பிரகாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தன்னை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கு அளவற்ற செல்வத்தை அள்ளித்தரும் இந்த மகாலட்சுமி அன்னையின் கோவிலுக்கு இதுவரை செல்லாதவர்கள், ஒருமுறை சென்று அன்னையை பயபக்தியுடன் வணங்கி அவரது ஆற்றலை பெறலாம்.

பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். அப்போது கோவில் கூடுதல் நேரம் திறந்திருக்கும்.

அமைவிடம்

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், கரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது மகாதானபுரம் என்ற ஊர். இங்கிருந்து தெற்கில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் மகாலட்சுமி அம்மன் திருக்கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பஸ், ரெயில் என இரு மார்க்கத்திலும் செல்லலாம். எப்படி சென்றாலும் மகாதானபுரத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து நகரப் பேருந்திலோ அல்லது நடந்தோதான் செல்ல முடியும்.


Next Story