திருமண தடையா..? கவலை வேண்டாம்: நடுச்சத்திரம் காசி விசுவநாதர் ஆலயம் வாங்க..!


Naduchatram Kashi Viswanath Temple in tamil
x

நடுச்சத்திரம் காசி விசுவநாதர் ஆலயத்தில் தனி சன்னிதியில் சனி பகவான், 'பொங்கு - சனி'யாகவும். 'குபேர சனி'யாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை என்ற ஊருக்கு அருகில் உள்ளது, நடுச்சத்திரம். இங்கே காசி விசுவநாதர் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது. காசிக்கு நிகரான புண்ணியத்தலம் என்று சொல்லப்படும் இந்தக் கோவில், காசியில் இருந்து நேர்கோட்டில் அமையப்பெற்றிருப்பதாக சொல்கிறார்கள். இத்தலத்தின் இறைவன் பெயர் - 'காசி விசுவநாதர்', இறைவியின் பெயர் - அன்னபூரணி',

பெரும்பாலான தலங்களில் அன்னபூரணி அம்மன் கிழக்கு நோக்கி வீற்றிருப்பார். ஆனால் இந்த தலத்தில் மட்டும் அம்மன் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். அதேபோல சிவனை பார்த்தபடி நந்தி இருக்கும். ஆனால் இந்த கோவிலில் மட்டும் அன்னபூரணி அம்மனை பார்த்தபடி கழுத்தை மட்டும் வடக்கு திசையில் திருப்பி நந்தி இருப்பது சிறப்பு ஆகும். இந்த நந்தியின் ஒரு கண் சிவனை பார்த்தும், மற்றொரு கண் அன்னபூரணியை பார்த்தபடியும் தலை சாய்ந்த நிலையில் உள்ளது.

இந்த தலத்தில் தனி சன்னிதியில் சனி பகவான், 'பொங்கு - சனி'யாகவும். 'குபேர சனி'யாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சனி பகவான் சங்கடங்களை தருவார் என பக்தர்கள் கூறுவர். ஆனால் இங்குள்ள சனி பகவான் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு குபேரர் போல் செல்வத்தை வாரி வழங்குகிறார். ஆதலால் தான் இந்தக் கோவிலில் உள்ள சனி பகவானை 'குபேர சனீசுவரர்' என அழைக்கின்றனர்.

சண்டிகேசுவரர் பெரும்பாலான கோவிலில் தியான நிலையில் பீடத்தில் அமர்ந்து இருப்பார். ஆனால் இந்தக் கோவிலில் நந்தி மேல் அமர்ந்து இருப்பது கூடுதல் சிறப்பினை சேர்க்கிறது. இந்தக் கோவிலில் கன்னி மூலையில் பிள்ளையாரும், வாயு மூலையில் வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமானும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஈசானிய மூலையில் பைரவர் உள்ளார். இந்த தலத்தில் உள்ள கொடி மரத்தின் அடிப்பாகம் தாமரை பூ போன்ற வடிவமைப்புடன் உள்ளது. இங்கு வற்றாத நூபுர கங்கை தீர்த்தக் கிணறு உள்ளது. தென்திசை நோக்கியபடி குருபகவானும், சிவனுக்கு நேர் எதிராக வலது புறம் சூரியனும், இடது புறம் சந்திரனும் அமைந்துள்ளனர்.

கோவிலில் ஆங்காங்கே மீன் சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பதால் இது 1200 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட கோவில் என்றும் கூறப்படுகிறது. கோவில் அமைந்துள்ள இடம் முன்பு வனமாக இருந்திருக்கிறது. இந்த வனப்பகுதியின் வழியாகத்தான் கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு செல்லும் பக்தர்கள் பயணம் மேற்கொண்டதாக கூறுகிறார்கள். கோவிலுக்கு அருகே நீர்நிலை இருந்துள்ளது. இதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான் பாண்டிய மன்னர்கள் இங்கு கோவில் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த வழியாக செல்பவர்கள் இங்குள்ள நீர்நிலைகளில் நீராடிவிட்டு இந்த தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள் தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு வெள்ளை பூசணிக்காய் ஒன்றை (தடியங்காய்) இரண்டாக பிளந்து 108 வெள்ளை மிளகு எடுத்து பாதியாக பிரித்து பூசணிக்காயின் இரு பகுதிகளிலும் வைத்து, இலுப்பை எண்ணை ஊற்றி தீபம் ஏற்றினால் தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.

பிரதோஷம் அன்று அன்னபூரணியை வணங்கி எலுமிச்சை மாலையை அம்மனுக்கு சாத்தி இறைவன், இறைவியை மனமுருக வேண்டினால் நல்ல வரன் கிடைக்கும். அதேபோல ஆண்கள் பிரதோஷத்தன்று இங்குள்ள அம்மனுக்கு பூ மாலை சாற்றி 3 பிரதோஷங்கள் வந்து வழிபாட்டால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். அதேபோல குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இளநீர் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கோவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவிலும், சாத்தூரில் இருந்து 22 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.


Next Story